பெய்ரூட் தாக்குதலில் ஹிஸ்புல்லாஹ் தலைவர் நயீம் காசிமின் செயலாளர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளாா்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் தற்போதைய பொதுச்செயலாளர் நயீம் காசிமின் (Naim Qassem) தனிச் செயலாளர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்துள்ளது.
பெய்ரூட்டின் தெற்குப் புறநகர் பகுதியான தஹியே (Dahiyeh) பகுதியில் இஸ்ரேல் நேற்றிரவு தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ஹிஸ்புல்லாஹ்வின் உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் முக்கியமான தகவல் தொடர்பு மையங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நயீம் காசிமின் நெருங்கிய உதவியாளரும், அவரது செயலாளராகவும் பணியாற்றிய நபர் இந்தத் தாக்குதலில் உயிரிழந்ததாக இஸ்ரேல் தரப்பு கூறுகிறது. ஹசன் நஸ்ரல்லாஹ்வின் மறைவுக்குப் பிறகு ஹிஸ்புல்லாஹ்வின் தலைவராகப் பொறுப்பேற்ற நயீம் காசிமிற்கு இது ஒரு பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. அவரது பாதுகாப்பு வலையத்திற்குள் இஸ்ரேல் ஊடுருவியுள்ளதையே இது காட்டுகிறது.
ஹிஸ்புல்லாஹ்வின் ஆயுதக் கிடங்குகள், நிதி மையங்கள் மற்றும் முக்கிய தளபதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் கடந்த சில வாரங்களாகத் தீவிரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்களால் பெய்ரூட்டின் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இஸ்ரேலின் அறிவிப்பை ஹிஸ்புல்லாஹ் அமைப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை. பொதுவாக, இது போன்ற உயர்மட்ட உயிரிழப்புகளை அந்த அமைப்பு சிறிது காலதாமதத்திற்குப் பிறகே வெளியிடும் வழக்கம் கொண்டது. இருப்பினும், பெய்ரூட் மீதான வான்வழித் தாக்குதல்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தீவிரமடைந்துள்ளதால், பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர்: 38-வது நாள் நேரலைத் தகவல்கள்
