Homeசெய்திகள்உலகம்அச்சுறுத்தும் அதிபயங்கர பாம்புத்தீவு

அச்சுறுத்தும் அதிபயங்கர பாம்புத்தீவு

-

பிரேசில் என்றாலே நம் நினைவுக்கு வருவது அழகான தீவுகள்… குட்டி குட்டி கடற்கரை… விதவிதமான வனப்பகுதிகள்… இந்த இடங்களை சுற்றிப்பார்க்கவும், பொழுதை கழிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் பிரேசில் நாட்டுக்கு படையெடுத்து வருகின்றனர். ஆனால், ஒரே ஒரு தீவுக்கு மட்டும் சுற்றுலா பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் நிச்சயம் அனுமதி கிடையாது என பிரேசில் அரசு தடை விதித்துள்ளது. இந்த பயத்துக்கு காரணம் பாம்புகள். அப்படி, அந்த தீவுக்கும் பாம்புகளுக்கும் என்ன தொடர்பு, ஒரு தீவைக் கண்டு அரசாங்கமே நடுங்கும் அளவு அத்தீவுக்கு பின்னால் இருக்கும் மர்மம் என்ன??? தெரிந்து கொள்வோம்…

பிரேசில் நாட்டின் சாவோ பாவுலோ மாகாணத்திற்கு உட்பட்ட ஒரு தீவு உள்ளது. பிரேசில் கடற்கரையில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் அட்லாண்டிக் கடல் பகுதியில் அமைந்துள்ளது கெய்மாதா கிராண்டி தீவு. இந்த தீவுக்கு மற்றொரு பெயர் உண்டு. பாம்புத்தீவு…. ஆம், பெயருக்கு ஏற்றது போலவே தீவு முழுவதும் பாம்புகள் மட்டுமே உள்ளன. எந்த அளவு என்றால், ஒரு அடிக்கு ஒரு பாம்பு என்ற கணக்கில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகள் இந்த தீவை ஆக்கிரமித்து ஆட்சி புரிகின்றன. இதில், மேலும் சுவாரஸ்யம் என்னவென்றால் அத்தீவில் இருக்கும் அனைத்து பாம்புகளும் கொடிய நச்சு வாய்ந்தவை என்கிறார்கள்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் நீர் மட்டம் உயர்ந்ததால், பிரேசில் நாட்டின் நிலப்பகுதியிலிருந்து இப்பகுதி மட்டும் தனியாக பிரிந்து வந்த தனித்தீவாக மாறியது. தொடக்க காலத்தில் இந்த தீவு முழுக்க பாம்புகள் இருப்பது அறியாமல், சில சுற்றுலா பயணிகள் அத்தீவுக்கு சென்று பாம்புகளிடம் சிக்கி உயிரை பறிகொடுத்துள்ளனர். மனிதர்களின் மரணம் தொடர்ந்து கொண்டே இருந்ததால், அந்த தீவுக்கு மனிதர்கள் யாரும் செல்லக்கூடாது என பிரேசில் அரசு தடை விதித்தது.

 

அட்லாண்டிக் கடல் வழியே செல்லும் படகுகளோ அல்லது கப்பலோ தவறுதலாக கூட அத்தீவில் கரை ஒதுங்காமல் பாதுகாக்க, 1909-ம் ஆண்டு ஒரு கண்காணிப்பு கோபுரத்தையும் பிரேசில் அரசு அமைத்தது. மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரையும் அந்த கோபுரத்தில் பாதுகாப்பு பணிக்காக பிரேசில் அரசு பணி அமர்த்தியது. ஆனால், ஒரு இரவு கோபுரத்தின் ஜன்னலை மூட மறந்ததால், அவ்வழியாக உள்ளே நுழைந்த பாம்புகள் 4 பேரையும் கடித்து கொன்றுவிட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு ஆபத்தை விலை கொடுத்து வாங்க விரும்பாத அரசு, அங்கு யாரையும் பணி அமர்த்த முயற்சிக்கவில்லை.

இந்த தீவில் பல வகையான பாம்புகள் உண்டு. அதில் முக்கியமானது கோல்டன் லான்ஸ்ஹெட் எனும் பாம்பு. தங்கம் போல ஜொலிக்கும் இந்த பாம்பு உலகிலேயே கொடிய விஷம் வாய்ந்த பாம்புகளில் ஒன்று. இந்த விஷம் மனிதனின் தசையை தண்ணீர் போல உருக்கும் அளவு வீரியம் மிகுந்தது என்பது கேட்போருக்கு திகிலூட்டுகிறது. கோல்டன் பாம்புகள் கடித்தால், அடுத்த சில விநாடிகளில் ரத்தம் உறைந்து மரணம் நிச்சயம் என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள். உயிர் பிழைக்க 3 சதவிகிதம் மட்டும்தான் வாய்ப்பே உள்ளதாம்.

 

இங்குள்ள பாம்புகளின் விஷம் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்து தயாரிக்க பயன்படுவதால், சில சமூக விரோதிகள் தடையை மீறி பாம்புகளை பிடித்து கள்ளச்சந்தையில் ஒரு பாம்பு 25 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். இதை தடுக்கும் நோக்கிலும், பாம்புகளை பாதுகாக்கும் நோக்கிலும் பாம்புத்தீவுக்கு பிரேசில் தடை போட்டுள்ளது. ஆனால், அண்மையில், இத்தீவில் கோல்டன் பாம்புகள் தொடர்ந்து அழிந்து வருகின்றன. அதற்கான காரணம் குறித்து ஒரு பக்கம் ஆராய்ச்சிகள் நடைபெற்றாலும், அரிய வகை பாம்புகளை மீட்டெடுக்க பிரேசில் அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தவிர பாம்புத் தீவில் சில புதையல்கள் இருப்பதாகவும், அதை காக்கவும் பிரேசில் அரசு தடை போட்டிருப்பதாக சில தகவல்களும் உலாவுகின்றன. நிஜத்தில் அங்கு இருப்பது பாம்புகள் மட்டுமா அல்லது அதோடு ஏதேனும் மர்மங்களும் மறைந்துள்ளதா? மறைக்கப்பட்டுள்ளதா? என நேரில் சென்று பார்ப்பவர்களுக்கே தெரியும்…

MUST READ