உலக அரங்கில் வல்லரசு நாடான அமெரிக்கா, தனக்குக் கட்டுப்படாத நாடுகள் மீது விதிக்கும் மிகக் கொடூரமான ஆயுதம் ‘பொருளாதாரத் தடை’ ஆகும். இந்த வகையில், ஈரான் மீது மட்டும் அமெரிக்கா இதுவரை 3,500-க்கும் மேற்பட்ட பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அண்மைய அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் போர் மற்றும் கடந்த 50 ஆண்டு காலப் போர்களை எதிர்கொண்டும் ஈரான் இன்னும் சீட்டுக்கட்டாய் சரிந்துவிடாமல் நிமிர்ந்து நிற்பது உலகப் பொருளாதார நிபுணர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


சமீபத்திய போரின் முதல் 40 நாட்களில் மட்டும் ஈரானுக்கு 270 பில்லியன் டாலர் அளவுக்குப் பொருளாதாரச் சேதமும், கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் பெரும் வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது. நாட்டின் பணவீக்கம் 62 விழுக்காட்டைத் தொட்டுள்ளது, உள்ளூர் நாணயமான ‘ரியால்’ 44 விழுக்காடு வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஈரான் எவ்வாறு தன்னைத் தற்காத்துக் கொள்கிறது என்பது சர்வதேச அளவில் உற்றுநோக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது.
‘எதிர்ப்புப் பொருளாதாரம்’ என்ற புதிய வடிவம்:
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உலக நாடுகள் அனைத்தும் வளர்ச்சி சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி ஓடியபோது, ஈரான் மட்டும் தனக்கென ‘வாழ்வாதாரம் சார்ந்த அரசியல் பொருளாதார’ மாதிரியை உருவாக்கிக் கொண்டது. இதனை ‘எதிர்ப்புப் பொருளாதாரம்’ (Resistance Economy) என்றும் அழைக்கிறார்கள். வெளிநாட்டுச் சூழல்களையோ இறக்குமதியையோ நம்பியிருக்காமல், உள்நாட்டுத் திறன்களையும், வேலைவாய்ப்புகளையும், சுயமாக உருவாக்குவதுதான் இதன் முக்கியக் கோட்பாடாகும்.
அமெரிக்காவின் தடைகள் ஈரானின் பொருளாதார வளர்ச்சியைப் பாதித்தது உண்மைதான். ஆனால், அதிலிருந்து மீள ஈரான் தனது வியூகங்களை அதிரடியாக மாற்றியது. குறிப்பாக, தன் முதன்மை வருவாயான கச்சா எண்ணெய் ஏற்றுமதி முடக்கப்பட்ட போது, அதற்குப் பதிலாக பெட்ரோகெமிக்கல்ஸ், இரும்பு மற்றும் கனிமப் பொருட்கள் ஏற்றுமதியை ஈரான் அதிகரித்தது.
சுயசார்பு உற்பத்தியில் சாதனை:
அத்தியாவசியத் தேவைகளுக்கு பிற நாடுகளை நம்பியிருப்பதைத் தவிர்க்க, மருந்துப் பொருட்கள் இறக்குமதியை 80 விழுக்காடு வரை ஈரான் அதிரடியாகக் குறைத்து, உள்நாட்டிலேயே மருந்துகளைத் தயாரித்தது. மாறாக, மருத்துவக் கருவிகளை மட்டும் இறக்குமதி செய்துகொண்டது. நாட்டின் பாதுகாப்புக்கான ஆயுதங்கள் மற்றும் திரவ வடிவ எரிபொருட்களைச் சொந்தமாகவே உற்பத்தி செய்யத் தொடங்கியதும் ஈரானின் தாங்குதிறனை அதிகரித்தது.
அமெரிக்கக் கண்காணிப்பை உடைக்கும் ‘நிழல் வழித்தடங்கள்’:
அமெரிக்கா விதித்துள்ள தடைகளின்படி, உலக நாடுகள் எதுவும் ஈரானுடன் டாலர் அடிப்படையில் இயல்பான வணிகம் செய்ய முடியாது. இதனை உடைக்க ஈரான் பல்வேறு மாற்று உத்திகளைக் கையாண்டது. சர்வதேச வங்கி முறைகளைத் தவிர்த்து, ‘நிழல் வங்கிகள்’ (Shadow Banking) எனப்படும் முறைசாரா நிதி வழிமுறைகளைப் பயன்படுத்தியது. அத்துடன், வர்த்தகத்தில் அமெரிக்க டாலரைப் புறக்கணித்துவிட்டு, இரு நாடுகளின் உள்ளூர் நாணயங்கள் மூலமாகப் பணப் பரிமாற்றம் செய்தது.
மேலும், அதிகாரப்பூர்வமற்ற இடைநிலையாளர்கள் மற்றும் தனியார் விநியோகச் சங்கிலி மூலம் கச்சா எண்ணெயை ரகசியமாக ஏற்றுமதி செய்தது. இந்த முறைசாரா வர்த்தகத்திற்காக ஈரான் கூடுதல் தொகையைச் செலவழிக்க வேண்டியிருந்தாலும், அமெரிக்கா நினைத்த ‘பொருளாதாரத் தனிமைப்படுத்தலை’ ஈரான் இதன்மூலம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
அமெரிக்காவின் ‘பொருளாதாரத் தடை’ அரசியல்:
அமெரிக்கா தனது டாலர் வலிமையைப் பயன்படுத்தி கியூபா, ஈரான், ரஷ்யா, வடகொரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி தடைகளை விதிக்கிறது. இதனால் அந்த நாடுகளின் சர்வதேச சொத்துக்கள் முடக்கப்பட்டு, மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். உலகப் போலீஸ்காரனாகச் செயல்படும் அமெரிக்காவின் இத்தகைய அநீதியான பொருளாதாரத் தடைகளும், ஐ.நா. சபையில் வல்லரசுகளுக்கு இருக்கும் ரத்து அதிகாரமும் (Veto Power) ஒழிக்கப்பட வேண்டும் என்பதே தற்போதைய உலகளாவிய மனிதநேயச் சிந்தனையாளர்களின் குரலாக உள்ளது.
