Homeசெய்திகள்உலகம்காஸ்பியன் கடலில் ஈரானிய கப்பல் மீதான உக்ரைன் தாக்குதல்: உலகப் போராக வெடிக்குமா மத்திய கிழக்கு...

காஸ்பியன் கடலில் ஈரானிய கப்பல் மீதான உக்ரைன் தாக்குதல்: உலகப் போராக வெடிக்குமா மத்திய கிழக்கு – ஐரோப்பிய மோதல்கள்?

-

- Advertisement -

ரஷ்யா – உக்ரைன் போரும், மத்திய கிழக்கு மோதல்களும் இதுவரை தனித்தனியாக நடந்து வந்த நிலையில், தற்போது அவை காஸ்பியன் கடல் பகுதியில் ஒன்றாக இணைந்து உலகளாவிய பெரும் அபாயத்தை உருவாக்கியுள்ளன. ரஷ்யாவின் அஸ்ட்ரகான் துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற ஈரானிய வணிகக் கப்பல் மீது உக்ரைன் நடத்திய அதிரடித் தாக்குதல் சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதோடு, ஈரானிய மாலுமி ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

உக்ரைன்

we-r-hiring

எல்லையற்ற பதற்றத்தை உருவாக்கிய காஸ்பியன் கடல் தாக்குதல்

ஈரானின் வடக்கு எல்லையை ஒட்டியுள்ள காஸ்பியன் கடல் பகுதி, இதுவரை எந்தவித நேரடி மோதல்களும் இன்றி அமைதியான வர்த்தக நீர்வழியாக விளங்கி வந்தது. ஈரானின் மீது விதிக்கப்பட்டுள்ள சர்வதேச பொருளாதாரத் தடைகள் காரணமாக, ரஷ்யாவுடனான ராணுவத் தளவாடப் பரிமாற்றங்கள் மற்றும் ட்ரோன் விநியோகத்திற்கு இந்த நீர்வழிப் பாதையே முக்கியப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

நிலவியல் ரீதியாக உக்ரைனுக்கு காஸ்பியன் கடலில் நேரடி எல்லைகள் ஏதுமில்லாத போதிலும், அதிநவீன ட்ரோன்களைப் பயன்படுத்தி உக்ரைன் நடத்திய இந்தத் தாக்குதல் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை வெளிப்படையாக மீறும் செயல் என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இதற்கு தக்க பதிலடி கொடுக்காமல் இருக்க மாட்டோம் என்று ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி எச்சரித்துள்ளார்.

ஒன்றினையும் போர்க்களங்கள்: ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்கா வரை…

கிழக்கு ஐரோப்பியப் போரும், மத்திய கிழக்கு மோதல்களும் தற்போது ஒரே புள்ளியில் இணைந்திருப்பது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகம் சந்திக்கக்கூடிய மிக அபாயகரமான புவிசார் அரசியல் (Geopolitical) திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. உக்ரைன் ராணுவம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு நேரில் சென்று ஈரானிய ‘ஷாஹெத்’ (Shahed) ட்ரோன்களைக் குறைந்த செலவில் துல்லியமாகச் சுட்டுவீழ்த்துவது எப்படி என்பது குறித்த தொழில்நுட்பப் பயிற்சிகளை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

மறுபுறம், ஆப்பிரிக்க மண்ணிலும் ரஷ்யாவின் வாக்னர் படைகளின் நிதி ஆதாரங்களைச் சீர்குலைக்கும் வகையில் உக்ரைன் ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன், மாலி போன்ற நாடுகளுடன் மோதல்களையும் சந்தித்துள்ளது.

உலகப் பொருளாதாரத்திற்கு எழும் பெரும் ஆபத்து

இந்த மோதல்களின் விரிவாக்கம் காரணமாக உலக வர்த்தகத்திற்கு மிக முக்கியமான செங்கடல், ஹோர்மூஸ் நீரிணை மற்றும் காஸ்பியன் கடல் ஆகிய மூன்று கப்பல் போக்குவரத்துப் பாதைகளும் ஒரே நேரத்தில் பெரும் முடக்கத்தை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலரைத் தாண்டக்கூடும் என்றும், கோதுமை விநியோகம் மற்றும் உரம் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டால் உலகளவில் பணவீக்கம் கணிசமாக உயரும் என்றும் வர்த்தக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இரு துருவங்களாகப் பிரியும் உலக நாடுகள்

இந்த நிகழ்வுகள் உலகை மீண்டும் இரண்டு ராணுவ முகாம்களாகப் பிரித்துள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல் மற்றும் உக்ரைன் ஒருபுறமும்; ரஷ்யா, ஈரான், வடகொரியா மற்றும் சீனா மறுபுறமும் அணிதிரண்டுள்ளன. ஐநா சபை போன்ற சர்வதேச ராஜதந்திர அமைப்புகள் முற்றிலும் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சூழலில், காஸ்பியன் கடலில் வீசியுள்ள இந்தப் போர்க்காற்று உலக அமைதியை எங்கு கொண்டுபோய் நிறுத்தப் போகிறது என்ற அச்சம் சர்வதேச அளவில் எழுந்துள்ளது.

விஜய்க்கு நீதிமன்றத்தின் அதிரடி குட்டு! – அரசுப் பணி வழங்கிய அரசாணைகள் ரத்து பின்னணி என்ன? – மூத்த வழக்கறிஞர் கோடீஸ்வரன் பேட்டி

MUST READ