மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, அமெரிக்கா தனது ராணுவ வலிமையை முன்னெப்போதும் இல்லாத வகையில் குவித்து வருகிறது.
ஏற்கனவே இரண்டு விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் அப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மூன்றாவதாக ஒரு கப்பல் அனுப்பப்படுகிறது. இது அமெரிக்காவின் ஆகச்சிறந்த கடல்வழித் தாக்குதல் திறனை பெற்றது. வான்வழி மற்றும் கடல்வழிப் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக சுமார் 5,000 கூடுதல் அமெரிக்க வீரர்கள் அந்தப் பிராந்தியத்திற்கு அனுப்பப்படுகின்றனர். இது 2003-இல் ஈராக் மீதான படையெடுப்பின் போது மேற்கொள்ளப்பட்ட ராணுவக் குவிப்பிற்குப் பிறகு, இப்போதுதான் இவ்வளவு பெரிய அளவில் படைகள் மற்றும் தளவாடங்கள் அந்தப் பகுதிக்கு அனுப்பப் படுகின்றன.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நேரடிப் போர் மூளும் அபாயம் இருப்பதால், இஸ்ரேலைப் பாதுகாக்கவும், ஈரானின் தாக்குதல்களைத் தடுக்கவும் அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

மேலும் உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கடல்வழித் தடைகள் ஏற்படாமல் தடுப்பது அமெரிக்காவின் முக்கிய நோக்கமாகும்.
தனது நட்பு நாடுகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதன் மூலம், மத்திய கிழக்கில் தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள அமெரிக்கா முயல்கிறது.
அமெரிக்காவின் இந்த அதிரடி நகர்வு, அந்தப் பிராந்தியத்தில் ஒரு பெரிய போருக்கான அச்சத்தை அதிகரித்துள்ளது. அதே சமயம், இது ஒரு “எச்சரிக்கை நடவடிக்கை” (Deterrence) என்றும், எதிரி நாடுகளைத் தாக்குதலில் இருந்து பின்வாங்கச் செய்யவே இவ்வளவு பெரிய படை பலத்தைக் காட்டுவதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுடன் இணைய ஈரானுக்கு ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் அழைப்பு
