தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள், வரும் ஏப்ரல், மே மாதங்களில் மலேசியா நாட்டில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியா நாட்டில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம், சென்னை வடபழனியில் நடைபெற்றது. இது குறித்து மலேசிய நாடாளுமன்ற உறுப்பினரும் மலேசியாவின் முன்னாள் அமைச்சருமான சரவணன், இலங்கை கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமான், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில தலைவர் ஒன்டியராஜ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய மலேசியா எம்.பி.சரவணன், மலேசிய ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தின் 28 மாவட்டங்களில் இருந்து ஜல்லிக்கட்டு நடத்தக்கூடிய பிரதிநிதிகளுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன என்றார். தமிழக எல்லையை தாண்டி இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தப்பட்டதை குறிப்பிட்ட அவர், அடுத்த இலக்காக தமிழர்கள் அதிகம் வாழும் மலேசியா நாட்டில் நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வெகுவாக எழுந்துள்ளதென அவர் தெரிவித்தார்.
ஏறத்தாழ 2 லட்சம் தமிழக தொழிலாளர்கள் மலேசியாவில் பணிபுரிவதாகவும் மலேசிய மண்ணில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருப்பதாகவம் சரவணன் கூறினார். ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ஜல்லிக்கட்டு மிகப்பெரிய விழாவாக மலேசியா மண்ணில் நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எத்தனை மாடுகளைக் கொண்டு முதற்கட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது யாரை அழைக்கலாம் என்பது பற்றியெல்லாம் விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய சரவணன், தொடர்ச்சியாக இது குறித்து அறிவிப்புகள் வெளிவரும் என்றார். மலேசியாவில் எந்த இடத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது? என்னென்ன வசதிகள் தேவை என்பன குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்க, தமிழகத்திலிருந்து போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் மலேசியா வர உள்ளனர் என அவர் தெரிவித்தார். இது குறித்து ஞாயிறன்று முதலமைச்சரை சந்தித்து பேச இருப்பதாகவும தமிழ்நாட்டை தாண்டி ஜல்லிக்கட்டை கொண்டு செல்லும் போது தமிழக அரசு உதவி செய்யும் என்றும் சரவணன் நம்பிக்கை வெளியிட்டார்.
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான காளைகள் மலேசியாவில் எத்தனை உள்ளன என்பது குறித்து கணக்கெடுப்பு நடந்து வருவதாகவும் 100 முதல் 200 காளைகள் வரை போட்டிகளில் பங்கேற்கும் என்றும் மலேசிய எம்.பி.சரவணன் கூறினார்.
அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இலங்கை கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமான்,
ஜல்லிக்கட்டு போட்டியை சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்றார். சில அமைப்புகள் மூலம் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என தமிழ்நாடு ஜல்லிகட்டு பாதுகாப்பு சங்கத்தினர் முடிவு செய்தபடி இலங்கையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதாக செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
அடுத்தப்படியாக மலேசியாவில் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து தமிழர்கள் வாழும் மற்ற நாடுகளில் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என அவர் தெரிவித்தார்.
மேலும் மலேசியாவில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு நடிகர் பிரசாந்த் உறுதுணையாக இருந்து, உதவிகள் வழங்கி வருகிறார் என்று செந்தில் தொண்டமான் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில தலைவர் ஒன்டியராஜ், தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படாமல் இருந்த காலகட்டத்தில், மாணவர்கள் போராடி தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகளை கொண்டு வந்ததை பெருமையாக நினைவு கூர்ந்தார்.
இலங்கையில் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்தியதைத் தொடர்ந்து, இந்தாண்டு அதனை மலேசியாவில் நடத்துவதற்கான முழு ஒத்துழைப்பை வழங்க தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்கத்தினர் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த மாதம் இறுதியில் மலேசியாவுக்கு சென்று ஜல்லிக்கட்டு நடத்த எந்த இடம் என்பதை கண்டறிய இருப்பதாக அவர் கூறினார்.
மலேசியாவில் எந்தெந்த ஊர்களில் எந்த வகையான காளைகள் இருக்கின்றன என்பதை அறிந்து அவற்றின் செயல்பாடுகளை ஆராய்ந்து, மலேசிய மண்ணில் ஜல்லிக்கட்டு போட்டிகள் மகத்தான முறையில் நடத்தப்படும் என்று ஒண்டிய ராஜ் கூறினார்.