ஈரான் தலைநகர் தெஹ்ரானை முக்கிய இடங்களை குறி வைத்து அமெரிக்கா – இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரான் தலைநகா் தெஹ்ரானை முக்கிய இடங்களை குறி வைத்து அமெரிக்கா – இஸ்ரேல் ராணுவம் ஆபரேஷன் ரோரிங் லயன்” (Operation Roaring Lion) என்ற பெயரில் மிகப்பெரிய வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் அருகே அமெரிக்கா படைகளை குவித்து வந்த நிலையில், தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவுடன் அணு ஆயுதம் ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் பேச்சு வாா்த்தை நடத்தி வரும் நிலையில் இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.
இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடா்ந்து அந்நாட்டு மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற ‘கதாயிப் ஹிஸ்புல்லா’ அமைப்பின் தளங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈராக்கின் ஜூர்ப் அல்-நாசர் பகுதியில் உள்ள தளங்கள் தகர்க்கப்பட்டதில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றன.

இஸ்ரேல் தாக்குதலில் தெஹ்ரானில் பல கட்டடங்கள் தீப்பற்றி எரிந்தன. இதன் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஈரான் அரசு வலியுறுத்தியுள்ளது. தெஹ்ரான் முழுவதும் குண்டு சத்தம் கேட்பதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. தங்கள் நாட்டின் உச்ச தலைவரும், அதிபரும் பாதுகாப்பாக உள்ளதாக ஈரான் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “தாக்குதலை தொடங்கி வைத்து விட்டீர்கள்; இனி முடிவு உங்கள் கையில் இல்லை” என கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் முக்கிய நகரங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. 70 ஏவுகணைகள் வரை இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவப்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஈரான் பதில் தாக்குதலுக்கு தயாராவதால் இஸ்ரேல் தனது வான்வெளியை மூடியது. ஈரானில் உள்ள இந்தியர்கள் வீட்டிலிருந்து வெளியே வருவதை தவிர்க்க இந்திய தூரதரம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், ஈரானில் உள்ள அனைத்து இடங்களிலும் குண்டு மழை பொழியும் என்றும் இன்று இரவும் பாதுகாப்பான இடங்களிலேயே மக்கள் தங்கியிருக்க வேண்டும் என அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவுறுத்தியிருந்தாா்.
ஈரானில் ஆட்சி மாற்றமே தங்களின் இலக்கு. அமெரிக்க மக்களின் எதிா்ப்பு நிலையை பதிவு செய்யவே ஈரான் மீதுதாக்குதல் நடத்தியதாக டிரம்ப் கூறியுள்ளாா். தற்போது தொடங்கியிருப்பது மிகப்பெரிய ராணுவ தாக்குதல் நடவடிக்கை ஈரானை அணு ஆயுதம் இல்லாத நாடாக மாற்றுவதே தனது லட்சியம் என அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறியுள்ளாா். ஈரானின் தாக்குதலை தொடா்ந்து கத்தாா், குவைத், ஐக்கிய அரபு அமீரக நாடுகளின் வான்வெளி மூடப்பட்டன. கத்தாா் நாட்டில் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளஅமெரிக்கா, இஸ்ரேலின் ராணுவ நிலைகளே தங்களின் இலக்கு என்று ஈரான் எச்சரித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தி வருவதால் இரு நாடுகளுக்கு இடையே போா் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், ஏர் இந்தியா, துபாய் ஏர்வேஸ், டர்கிஷ் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகளை மார்ச் 2-ம் தேதி வரை ரத்து செய்துள்ளன. நிலைமை வினாடிக்கு வினாடி மாறி வருவதால், சர்வதேச நாடுகள் கவலையுடன் கவனித்து வருகின்றன.
ஈரான் – இஸ்ரேல் இடையே போர்ப் பதற்றம்….மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்….


