இத்தாலியில் சத்தமாக இசைப் பாடல்கள் கேட்டது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தங்கையை அண்ணனே கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
இத்தாலி நாட்டை சேர்ந்த இளம்பெண் ஜிலெனியா முசெல்லா (22) என்பவர் கடந்த வார இறுதியில் இரவு நேர விடுதிகளுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அன்று இரவு வீட்டிற்கு சென்றதும் தனது வீட்டில் சத்தமாக இசைப் பாடல்களைக் கேட்டு, நடனம் ஆடியுள்ளார். அப்போது தூங்கிக் கொண்டிருந்த அவரது அண்ணன் கியூசெப் (28) என்பவர் பாட்டின் சத்தத்தைக் குறைக்குமாறு கூறியுள்ளாா். ஆனால் ஜிலெனியா முசெல்லா சத்தத்தை குறைக்காமல், தொடா்ந்து பாடல்களைக் சத்தமாக கேட்டும், நடனம் ஆடியும் உள்ளாா். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த அண்ணன், தங்கை ஜிலெனியா திரும்பியிருந்த நிலையில் அவரது முதுகில் கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். பின்னர் என்ன செய்து என்று தெரியாமல் தவித்துள்ளாா். படுகாயமடைந்த தங்கையை ஒரு மருத்துவமனை வாசலில் வீசிவிட்டு தப்பியோடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கியூசெப் சிக்கினாா். விசாரணையில் ‘தங்கையை தாக்குவேன் என்று தான் நினைக்கவில்லை, ஆத்திரத்தில் கத்தியை வீசினேன்’ என்று கியூசெப் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். உடல் உறுப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், கியூசெப்பை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே ஜிலெனியா உயிரிழப்பதற்கு முந்தைய நாள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இசைக்கு ஏற்ப நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவின் இறுதியில் ஒருவர் கையில் கத்தி போன்ற பொருளுடன் படிக்கட்டுகளில் இறங்கி வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண் கொலை செய்யப்படுவதற்கு முன்பே மர்ம நபர்களால் மிரட்டப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.


