வெனிசுலா மக்களுக்கு அமெரிக்கா தனது அஞ்சலியையும், முழு ஆதரவையும் தெரிவிப்பதாக மார்கோ ரூபியோ உறுதியளித்துள்ளாா். அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பேரில் உடனடியாக மீட்புக்குழுக்கள் மற்றும் மனிதாபிமான உதவிகள் விரைந்து செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளாா்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவை நிலைகுலையச் செய்த அடுத்தடுத்த இரு பயங்கர நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ (Marco Rubio) தன்னிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியதாக வெனிசுலாவின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodriguez) வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ ‘X’ (ட்விட்டர்) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள தற்காலிக அதிபர் ரோட்ரிக்ஸ், “நான் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் தொலைபேசி மூலம் பேசினேன். நமது நாடு சந்தித்துள்ள இந்த இக்கட்டான மற்றும் கடினமான சூழ்நிலையில், வெனிசுலா மக்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், முழு ஆதரவையும் அவர் தெரிவித்துக் கொண்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் இந்த உடனடி ஆதரவிற்கு நன்றி தெரிவித்துள்ள ரோட்ரிக்ஸ், “நாட்டின் பல பகுதிகளை மிகக் கடுமையாகப் பாதித்துள்ள இயற்கை பேரிடரின் இந்த சவாலான காலகட்டத்தில், வெனிசுலாவுக்கு ஆதரவாக நீட்டப்பட்ட இந்த மனிதாபிமான கரங்களை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்; இதற்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று மேலும் கூறியுள்ளார்.
அதிபர் டிரம்ப் உத்தரவின் பேரில் அமெரிக்கா உதவி:
முன்னதாக வியாழக்கிழமை காலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வெளியிட்ட அறிவிப்பில், “அதிபர் டொனால்ட் டிரம்ப் (President Donald Trump) அவர்களின் நேரடி உத்தரவின் பேரில், வெனிசுலாவுக்குத் தேவையான தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள், மருத்துவக் குழுக்கள் மற்றும் அவசர கால மனிதாபிமான உதவிகள் உடனடியாக அனுப்பி வைக்கப்படுகின்றன” என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு வாஷிங்டனின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய மார்கோ ரூபியோ, “இந்த பேரழிவு தரும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, வெனிசுலா மக்களுக்கு அமெரிக்காவின் சார்பில் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றும் தெரிவித்துள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகளையும் கடந்து, இந்த இக்கட்டான மனிதநேயச் சூழலில் அமெரிக்கா உடனடியாக உதவ முன்வந்திருப்பது சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
வெனிசுலாவில் அடுத்தடுத்த பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 164 ஆக உயர்வு!
