100 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பேரழிவு; அவசர நிலை பிரகடனம் இடிபாடுகளுக்கு இடையே தொடரும் மீட்புப் பணிகள். உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் வடக்கு கரீபியன் கடற்கரைப் பகுதியில் ஒரே நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரு சக்திவாய்ந்த பயங்கர நிலநடுக்கங்கள் தாக்கியுள்ளன. இதில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 971 பேர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெனிசுலாவின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodríguez) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளபடி, வெனிசுலா வரலாற்றில் கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு மிக அதிதீவிரமான நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளது.
முதல் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.2 ஆகப் பதிவானது.
இரண்டாவது நிலநடுக்கம்: அடுத்த 39 விநாடிகளிலேயே ரிக்டர் அளவில் 7.5 என்ற அதிபயங்கர தீவிரத்துடன் தாக்கியது.
இந்த அதிர்வுகள் நிலநடுக்க மையத்தில் இருந்து சுமார் 1,700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரேசிலின் அமேசான் காடுகள் வரை உணரப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெனிசுலா நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேசிய விடுமுறை தினமான ‘கராபோபோ போர் வெற்றித் தின’ கொண்டாட்டங்களின் போது (மாலை 6:00 மணி அளவில்) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் குடும்பத்துடன் வீடுகளில் இருந்த நேரத்தில், கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகளைப் போல சரிந்து விழுந்ததால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
தலைநகர் கராகஸ் (Caracas) மற்றும் அதன் அருகிலுள்ள கடலோர மாநிலமான லா குவைரா (La Guaira) ஆகிய பகுதிகள் மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. நாடு முழுவதும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தேசிய அவசர நிலையை அறிவித்துள்ளார். தலைநகரின் முதன்மை விமான நிலையமான ‘சைமன் பொலிவர் சர்வதேச விமான நிலையம்’ பலத்த சேதமடைந்து மூடப்பட்டுள்ளது. மெட்ரோ மற்றும் ரயில் சேவைகளும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.
கராகஸ் நகரின் பெரும்பகுதிகளில் மின் கம்பங்கள் சரிந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. செல்போன் மற்றும் இணையச் சேவைகளும் முடங்கியுள்ளதால், மக்கள் தங்கள் உறவினர்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.
”டஜன் கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகள் இடிபாடுகளாக மாறியுள்ளன. கட்டிட இடிபாடுகளுக்குள் இன்னும் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கியிருக்கலாம் என்பதால் மீட்புப் பணிகள் இரவும் பகலாக தீவிரமாக நடைபெற்று வருகின்றன” என்று உள்துறை அமைச்சர் தியோஸ்டாடோ கபெல்லோ தெரிவித்துள்ளார். மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைகளுக்குத் திரும்பி அவசரப் பணிகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டு, அவை நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன.
வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள இந்த பேரிடரைத் தொடர்ந்து அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி, சீனா, பிரேசில், அர்ஜென்டினா உள்ளிட்ட உலக நாடுகள் வெனிசுலாவுக்குத் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளன. மேலும், இடிபாடுகளுக்குள் தேடும் மோப்ப நாய்கள் மற்றும் நவீன கேமராக்களுடன் கூடிய மீட்புக் குழுக்களை அனுப்ப ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளன. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) கணினி மாதிரிக் கணிப்புகளின்படி, இடிபாடுகள் முழுமையாக அகற்றப்படும் போது பலி எண்ணிக்கை இன்னும் பல மடங்காக உயர வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளை உலுக்கியுள்ளது.
அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ஈரான் அழைப்பு
