ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்ததாகக் கூறி இந்தியாவின் சில நிறுவனங்கள் மீது அமெரிக்கா விதித்திருந்த பொருளாதாரத் தடைகளில் ஒரு பகுதியை தற்போது திரும்பப் பெற்றுள்ளது. இதில் நான்கு இந்திய நிறுவனங்கள் மீதான தடை அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 2022-ஆம் ஆண்டு போரைத் தொடங்கியதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் வருவாய் ஆதாரங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தது. குறிப்பாக, கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை மூலம் ரஷ்யா போருக்குத் தேவையான நிதியை திரட்டுவதாக குற்றம்சாட்டி, அந்நாட்டுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, 19 நிறுவனங்கள் மற்றும் 2 தனிநபர்கள் உட்பட இந்தியாவைச் சேர்ந்த 21 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது. இந்தச் சூழலில், இந்திய அரசின் தொடர் முயற்சிகளுக்குப் பிறகு, சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நான்கு இந்திய நிறுவனங்கள் மீதான தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது.
தடை நீக்கப்பட்ட நிறுவனங்கள்:
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆர்.ஆர்.ஜி. இன்ஜினியரிங் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்
லோகேஷ் மெஷின்ஸ் லிமிடெட்
ஆமதாபாத்தைச் சேர்ந்த கேலக்ஸி பியரிங்ஸ் லிமிடெட்
டெல்லியைச் சேர்ந்த சௌர்யா ஏரோநாட்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட்.இந்த நடவடிக்கை, இந்தியா–அமெரிக்கா வர்த்தக மற்றும் ராஜதந்திர உறவுகளில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
