
பாகிஸ்தானின் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலத்தில் ஏற்பட்ட படகு விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நீரில் மூழ்கி காணாமல் போன மேலும் 2 பேரை மீட்புக் குழுவினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கலாம் பள்ளத்தாக்கில் நேர்ந்த சோகம்

பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள அப்பர் ஸ்வாட் மாவட்டத்தின் கலாம் பள்ளத்தாக்கிற்குச் சுற்றுலா சென்றுள்ளனர். நேற்று அங்குள்ள இயற்கை எழில் கொஞ்சும் ‘சைபுல்லா’ ஏரியில் (Saifullah Lake) அவர்கள் உற்சாகமாகப் படகு சவாரி செய்தபோது, எதிர்பாராத விதமாகப் படகு ஏரியின் நடுவே தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகில் இருந்த 9 பேரும் அலறியடித்தபடி தண்ணீரில் மூழ்கினர்.
7 உடல்கள் மீட்பு; 2 பேரின் நிலை என்ன?
விபத்து குறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், மீட்புக் குழுவினர் மற்றும் உள்ளூர் முக்குளிப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
மஹோதண்ட் பகுதிக்கு அருகிலுள்ள ஏரிப் பரப்பிலிருந்து 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஏரியின் ஆழமான பகுதியில் மூழ்கி, காணாமல் போன அதே குடும்பத்தைச் சேர்ந்த எஞ்சிய 3 பேரைத் தேடும் பணி இன்றும் இரண்டாவது நாளாகத் தீவிரமாகத் தொடர்ந்து நிலையில் மேலும் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
”சுற்றுலா வந்த இடத்தில் இப்படி ஒரு கொடூர விபத்து நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல்களைச் சொந்த ஊருக்கு அனுப்பும் பணிகள் நடந்து வருகின்றன” என மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல்வர் அதிரடி உத்தரவு:
இந்த விபத்து குறித்து அறிந்த கைபர் பக்துன்க்வா மாகாண முதல்வர் சோஹைல் அப்ரிடி இரங்கலும் தெரிவித்துள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள அவர், “சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பில் ஏதேனும் அலட்சியம் காட்டப்பட்டதா அல்லது முறையற்ற முறையில் படகு இயக்கப்பட்டதா என்பது குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும். அலட்சியம் உறுதி செய்யப்பட்டால், அதற்கு காரணமானவர்கள் மீது சற்றும் தயங்காமல் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் ஏரிப் பகுதியில் பாதுகாப்பு உபகரணங்கள் (Life Jackets) இன்றி படகு இயக்கப்பட்டதுதான் இந்த உயிர்ச்சேதத்திற்குக் காரணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
