371. ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்று மடி
கலைஞர் குறல் விளக்கம் – ஆக்கத்திற்கான இயற்கை நிலை சோர்வு தலை காட்டாத ஊக்கத்தைக் கொடுக்கும். ஊக்கத்தின் அழிவுக்கான இயற்கை நிலை சோம்பலை ஏற்படுத்தும்.

372. பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூ ழுற்றக் கடை
கலைஞர் குறல் விளக்கம் – அழிவுதரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்: ஆக்கம் தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்.
373. நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்
கலைஞர் குறல் விளக்கம் – கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்.
374. இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு
கலைஞர் குறல் விளக்கம் – உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும். ஒருவர் செல்வமுடையவராகவும். ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்.
375. நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும்
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு
கலைஞர் குறல் விளக்கம் – நல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய் முடிந்துவிடுவதும், தீய செயல்களை ஆற்றிட முனையும்போது அவை நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை எனப்படும்.
376. பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம
கலைஞர் குறல் விளக்கம் – தனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல் போய்விடக் கூடும் உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா.
377. வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது
கலைஞர் குறல் விளக்கம் – வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப்பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும்.
378. துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்
கலைஞர் குறல் விளக்கம் – நுகர்வதற்குரியது எதுவுமில்லை என்ற உறுதியினால், தம்மை வருத்தக்கூடிய உணர்வுகள் வந்து வருத்தாமல் நீங்கிவிடுமானால் துறவறம் மேற்கொள்வர்.
379. நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்
கலைஞர் குறல் விளக்கம் – நன்மையும் தீமையும் வாழ்க்கையில் மாறி மாறி வரும். நன்மை கண்டு மகிழ்கிறவர்கள். தீமை விளையும்போது மட்டும் மனம் கலங்குவது ஏன்?
380. ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
கலைஞர் குறல் விளக்கம் – இயற்கை நிலையை மாற்றி மற்றொரு செயற்கை நிலையை அமைத்திட முனைந்தாலும், இயற்கை நிலையே முதன்மையாக வந்து நிற்பதால் அதைவிட வலிமையானவையாக வேறு எவை இருக்கின்றன?