Homeதிருக்குறள்71 -  குறிப்பறிதல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

71 –  குறிப்பறிதல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

-

- Advertisement -

71 - குறிப்பறிதல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

701. கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
        மாறாநீர் வையக் கணி

கலைஞர் குறல் விளக்கம்ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார் என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன் உலகத்திற்கு அணியாவான்.

702. ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
        தெய்வத்தோ டொப்பக் கொளல்

கலைஞர் குறல் விளக்கம்ஒருவன் மனத்தில் உள்ளதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி தெய்வத்திற்கே உண்டு என்று கூறினால். அந்தத் திறமை படைத்த மனிதனையும் அத்தெய்வத்தோடு ஒப்பிடலாம்.

703. குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
        யாது கொடுத்துங் கொளல்

கலைஞர் குறல் விளக்கம்ஒருவரின் முகக் குறிப்பைக் கொண்டே அவரது உள்ளக் குறிப்பை அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றலுடையவரை. எந்தப் பொறுப்பைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ள வேண்டும்.

704. குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
        உறுப்போ ரனையரால் வேறு

கலைஞர் குறல் விளக்கம்உறுப்புகளால் வேறுபடாத தோற்றமுடையவராக இருப்பினும் . ஒருவர் மனத்தில் உள்ளதை, அவர் கூறாமலே உணரக்கூடியவரும் உணர முடியாதவரும் அறிவினால் வேறுபட்டவர்களேயாவார்கள்.

705. குறிப்பிற் குறிப்புணரா ஆயின் உறுப்பினுள்
        என்ன பயத்தவோ கண்

கலைஞர் குறல் விளக்கம்ஒருவரது முகக்குறிப்பு, அவரது உள்ளத்தில் இருப்பதைக் காட்டிட விடும் என்கிறபோது, அந்தக் குறிப்பை உணர்ந்து கொள்ள முடியா கண்கள் இருந்தும் என்ன பயன்?

706. அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
        கடுத்தது காட்டும் முகம்

கலைஞர் குறல் விளக்கம்கண்ணாடி, தனக்கு எதிரில் உள்ளதைக் காட்டுவதுபோல் ஒருவரது மனத்தில் உள்ளதை அவரது முகம் காட்டி விடும்.

707. முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும்
        காயினும் தான்முந் துறும்

கலைஞர் குறல் விளக்கம்உள்ளத்தில் உள்ள விருப்பு வெறுப்புகளை முந்திக் கொண்டு வெளியிடுவதில் முகத்தைப் போல அறிவு மிக்கது வேறெதுவுமில்லை.

708. முகநோக்கி நிற்க அமையும் அகநோக்கி
        உற்ற துணர்வார்ப் பெறின்

கலைஞர் குறல் விளக்கம் – அகத்தில் உள்ளதை உணர்ந்து கொள்ளும் திறமை யிருப்பின், அவர், ஒருவரின் முகத்துக்கு எதிரில் நின்றாலே போதுமானது.

709. பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
        வகைமை உணர்வார்ப் பெறின்

கலைஞர் குறல் விளக்கம்பார்வையின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளக் கூடியவர்கள். ஒருவரின் கண்களைப் பார்த்தே அவர் மனத்தில் இருப்பது நட்பா, பகையா என்பதைக் கூறிவிடுவார்கள்.

710. நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்காற்
        கண்ணல்ல தில்லை பிற

கலைஞர் குறல் விளக்கம்நுண்ணறிவாளர் எனப்படுவோர்க்குப் பிறரின் மனத்தில் உள்ளதை அளந்தறியும் கோலாகப் பயன்படுவது அவரது கண் அல்லாமல் வேறு எதுவுமில்லை.

MUST READ