ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 10 சுற்றுகள் வரையிலான வாக்கு எண்ணிக்கையில், 4 வேட்பாளர்கள் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்றுள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கடந்த மாதம் 27ம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இந்த தேர்தலில் மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 வாக்குககளும், 398 தபால் வாகுகளும் பதிவாகியிருக்கிறது. ஈரோடு சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 77 வேட்பாளர்கள் இருப்பதால், 2 அறைகளில் 16 மேசைகள் அமைக்கப்பட்டு மொத்தம் 15 சுற்றுகளாக எண்ணப்படுகிறது.
தற்போது வரை 10 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றிருக்கிறது. இன்னும் 60 ஆயிரம் வாக்குகள் மட்டுமே எண்ணப்படவேண்டியுள்ளது.

ஆனால் தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக 6 சுற்றுகளின் முடிவுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 6 சுற்றுகள் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 46,072 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 16,907 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 4,062 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 605 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதுவரையில் நோட்டாவிற்கு 264 பேர் வாக்களித்திருக்கின்றனர்.
பிரதான கட்சிகளை தவிர, சுயேட்சை வேட்பாளர்களில் 36 பேர் ஒற்றை இலக்க வாக்குகளை பெற்றுள்ளனர். 4 சுயேட்சை வேட்பாளர்கள் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்றுள்ளனர். அதிலும், 73-வது வேட்பாளராக உள்ள ராஜேந்திரன் என்பவர் இதுவரையில் ஒரு வாக்கு கூட பெறவில்லை. மொத்த சுயேச்சை வேட்பாளர்களில் முத்துபாவா 294 வாக்குகளும், தீபன் சக்கரவர்த்தி 124 வாக்குகளும் என 3 இலக்க எண்ணில் வாக்குகள் பெற்றுளனர்.