தி.மு.க காங்கிரஸ் ஆகிய இரண்டு அரசியல் இயக்கங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள புரிதலும் கொள்கை உறவும் நிச்சயம் நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஸ்ரீராஜா சொக்கர் இல்லத் திருமணத்தை நடத்தி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையுரை ஆற்றினார்.

அப்போது பேசிய அவர், மணமக்களை வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன். சுயமரியாதை உணர்வுடன் திருமணம் நடந்து இருக்கிறது. இதுபோன்ற சீர்திருத்தத் திருமணங்களுக்கு 1967 க்கு முன்பு முறைப்படி சட்டப்படி செல்லுபடி ஆகக்கூடிய அங்கீகாரம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் 1967-க்கு பிறகு தி.மு.க அண்ணா தலைமையில் ஆட்சி பொறுப்பேற்று, சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை பெற்று தந்தார்.
சொக்கருக்கும் கலைஞருக்கும் இடையே நல்ல உறவு இருந்தது சட்டமன்றத்திலும் பல்வேறு நிகழ்வுகளில் சொக்கர் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். சொக்கருடன் பாசத்துடன் உரிமையுடன் பழகியவர் கலைஞர் என்றும் சட்டமன்றத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று எனக்கே பாடம் எடுத்தவர் சொக்கர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தி.மு.க, காங்கிரஸ் பேரியக்கம் ஒரு காலத்தில் வேறு வேறு பாதையில் பயணித்திருந்தாலும், இன்று நாட்டின் நன்மைக்காக, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் அதையும் தாண்டி இந்திய நாட்டின் ஒற்றுமைக்காக ஒரே அணியில், ஒரே சிந்தனையுடன் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.
சகோதரர் ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் என் மேல் காட்டக் கூடிய அன்பு வார்த்தைகளால் சொல்ல முடியாது. மற்ற அரசியல் கட்சித் தலைவர்களை அழைக்கும் போது நான் யாரையும் சகோதரர் என்று குறிப்பிட்டதில்லை. ஆனால் ராகுல் காந்தியை மட்டும் சகோதரர் என்று அழைக்கிறேன். காரணம் அவர் என்னை மூத்த அண்ணன் என்று குறிப்பிடுகிறார். போனில் பேசும் போதும், நேரில் பேசும்போதும் “மை டியர் பிரதர்” என்று அழைப்பாா். அதை மறக்க முடியாது.
அரசியல் உறவாக மட்டுமல்லாமல், கொள்கை உறவாகவும் வலுபெற்று இந்தியாவின் குரலாக எதிரொளித்துக் கொண்டிருக்கிறது. தனிபபட்ட மனிதர்களுன் நலனை விட நாட்டின் நலன் தான் முக்கியம் என்ற உணர்வோடு இந்த நட்புணர்வு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த இரண்டு அரசியல் இயக்கங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள புரிதலும், கொள்கை உறவும் நிச்சியம் நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும்.அது உறுதி என்று கூறிய முதலமைச்சர், மகிழ்ச்சியான நேரத்தில் மணமக்களை கேட்டுக் கொள்வது, உங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயரை சூட்டுங்கள் என்று மணமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்த திருமண விழாவில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.


