திருவள்ளூர் மாவட்டத்தில், பனை விதைகளை விதைக்கும் பணியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது.
வருங்காலங்களில் தற்சார்பு பொருளாதார வளர்ச்சிக்கு பனைமரம் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கும் என்ற தொலைநோக்கு பார்வையுடன், தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பனைவிதைகளை விதைக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார்.
அதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து ஊராட்சிகளிலும் பனை விதைகளை விதைக்கும் பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் திட்டமிட்டார். அதற்காக, திருவள்ளூர் மாவட்ட அளவில் பனை விதைப்பு குழு ஒன்றை உருவாக்கி, அதில் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வனத்துறை, நீர்வளத்துறை, வேளாண்மை துறை போன்ற துறைகளை சேர்ந்த அதிகாரிகளும், தன்னார்வ குழுக்களை சேர்ந்தவர்களையும் இணைத்து பனை விதைப்பு பணியை தீவிரபடுத்தினார்.
மேலும், பல இடங்களில் அவரே நேரடியாக சென்று பனை விதைகளை விதைக்கும் பணிகளை துவக்கி வைத்து வருகிறார். அதேபோல், சோழவரம் ஒன்றியம் நெடுவரம்பாக்கம் ஊராட்சியில் அடங்கிய , 6 குளங்கள், 1 ஏரி மற்றும் மேய்கால் விளைநிலத்தில் இருக்கும் தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலிகளின் ஓரமாக 1கிலோ மீட்டருக்கும் மேலாக இருக்கும் இடங்களிலும், 25 ஆயிரம் பனைவிதைகளை விதைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
அந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்/இணை இயக்குநர் ஜெயக்குமார், ஊரக வளர்ச்சி துறை செயல்பொறியாளர் ராஜவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை வேதவல்லி, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் விஜயராகவன், வன விரிவாக்க அலுவலர் லட்சுமண குமார் மற்றும் மக்கள் நலப்பணி இயக்க அறக்கட்டளை தலைவர் பாலகிருஷ்ணன், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர், காளியம்மாள், சோழவரம் வட்டார பொறியாளர் யாஷ்மி, நெற்குன்றம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாபு, ஊராட்சி செயலாளர் கோபி, களப்பணியாளர் பாஸ்கர் உட்பட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வாரத்தின் முதல் நாளே சரிவை கண்ட தங்கம்…நகைபிரியர்கள் மகிழ்ச்சி…



