
பெருமழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் வடகிழக்கு பருவமழையின் போது மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் நடைபெற்று வரும் திட்டப் பணிகளின் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் அரசு முதன்மைச் செயலாளர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தா. கார்த்திகேயன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர். ஜி.எஸ்.சமீரன் மற்றும் வாரியத்தின் தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்கள், நிர்வாகப் பொறியாளர்கள் மற்றும் பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இறுதியாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, “குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் தற்பொழுது நடந்து கொண்டிருக்கக்கூடிய திட்டங்களை விரைந்து முடிக்க ஆய்வுக்கூடம் நடத்தப்பட்டு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பேசியுள்ளோம். எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. சென்னையை பொறுத்தவரை எவ்வளவு மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளது. அரசின் சார்பில் சென்னையில் 200 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டுள்ளது” என்று கூறினார்.



