
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சீரமைக்கப்பட்ட கட்டிடங்களை உச்சநீதிமன்ற கிளையாக மாற்ற வேண்டும் என வழக்கறிஞர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி ஆரம்பத்தில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வந்தது. பின்னர் கடந்த 2015ம் ஆண்டு சட்டக்கல்லூரி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து, பழைய பாரம்பரிய கட்டடத்தை நீதிமன்றங்களாக மாற்ற சென்னை உயர்நீதிமன்ற நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படியே ரூ.30 கோடி செலவில் 6 கூடுதல் குற்றவியல் நீதிமன்றங்களாக தற்போது மாற்றப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வருகிற ஞாயிற்றுக்கிழமை (அக்.26) அன்று மத்திய சட்டத்துறை அமைச்சர், உச்சநீதிமன்ற மற்றும் உயர்ந்தீமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

அதேநேரம் இந்த பாரம்பரிய கட்டிடத்தை குற்றவியல் நீதிமன்றங்களாக மாற்றுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகக்கூறி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாறாக அந்தக் கட்டிடத்தை உச்ச நீதிமன்ற கிளை தொடங்க பயன்படுத்தலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். சென்னை சட்டக் கல்லூரியின் தாயகமாக விளங்கிய இந்தக்கட்டிடம் பல நீதிபதிகளை உருவாக்கிய நிலையில், அதனை வெறும் குற்றவியல் நீதிமன்றமாக மட்டும் மாற்றாமல் உச்சநீதிமன்ற கிளையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். குற்றவியல் நீதிமன்றங்களை மட்டும் இடம் மாற்றும் இந்த முடிவு, நல்ல நோக்கத்துடன் இருந்தாலும், மற்ற எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

உயர் நீதிமன்றம் நிறுவப்பட்டபோது குற்றவியல் அதிகார வரம்பே அதன் மிக அடிப்படையான அடித்தளமாக இருந்ததாக கூறும் வழக்கறிஞர்கள், குற்றவியல் நீதிமன்றங்களை வேறு இடத்திற்கு மாற்றுவது அந்தத் வரலாற்றை சிதைக்கும் என்கின்றனர். ஒருபக்கம் நிர்வாகத்தின் முடிவை வரவேற்க வேண்டும் என்று கூறும் இளம் வழக்கறிஞர்கள், பல்வேறு அதிகார வரம்புகளில் பயிற்சி பெற நீதிமன்றங்களை, கட்டிடங்களை பிரிப்பது கடினமாக இருக்கும் என்று கூறுகின்றனர். குற்றவியல் நீதிமன்றங்களை சீரமைக்கப்பட்ட கட்டிடத்திற்கு மாற்றுவதற்கான முடிவு குறுகிய கால நிவாரணத்தை வழங்கலாம், ஆனால் சட்டத் தொழிலின் எதிர்காலத்திற்கும், நீதித் துறையின் ஒருமைப்பாட்டிற்கும் இது பாதகமாகவே அமையும் என்றும் அவர்கள் தெரிவிபாதகமாகத்தான் இருக்கும் என தெரிவிக்கின்றனர் வழக்கறிஞர்கள்..


