
கரூர் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 குடும்பத்தினரை சென்னையில் சந்திக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் பரப்புரையின் ஈடுபட்டார். அங்கு விஜய்யைக் காண ஏராளமானோர் குவிந்திருந்த நிலையில், அப்போது திடீரென கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்குப் பிறகு , பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கரூருக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நலம் விசாரித்த நிலையில், விஜய் மட்டும் தற்போது வரை கரூர் செல்லவில்லை. இது பெரும் விவாதப்பொருளாகவும் மாறியது.
அதேநேரம் உயிரிழந்த 41 குடும்பத்தினரின் இல்லத்திற்கும் விஜய், கட்டாயம் நேரில் சென்று ஆறுதல் தெரிவிப்பார் என்றும், விஜய் கரூர் செல்ல காவல்துறையிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், விஜய் கரூர் செல்லும் திட்டம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக உயிரிழந்த 41 குடும்பத்தினரையும் சென்னை அழைத்து வந்து, இங்குள்ள ஒரு தனியார் அரங்கில் விஜய் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த சில தினங்களுக்குள் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து முடிக்க தீவிர முனைப்போடு உள்ளதாக கட்சி தரப்பில் கூறப்படுகிறது.



