தமிழன் உலக மாந்தர் ஆக உயர முத்தமிழுடன் நான்காவதாக அறிவியல் தமிழும் தேவை என வைரமுத்து வலியுறுத்தியுள்ளாா்.
சென்னை மீனம்பாக்கம் ஏ.எம் ஜெயின் கல்லூரி சென்னை பல்கலைக்கழகம் தமிழ் மேம்பாட்டு சங்கப் பலகை, மற்றும் சந்தியா பதிப்பகம் இணைந்து “பல்துறை சார்ந்த தமிழ் கல்வியும் அறிவியல் முன்னேற்றம்” என்கிற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கு இன்று தொடங்கியது.

இந்த கருத்தரங்கை திரைப்பட பாடல் ஆசிரியர் மற்றும் கவிஞருமான கவிப்பேரரசு வைரமுத்து துவக்கி வைத்து, மாணவர்களிடமும் தமிழ் அறிஞர்களிடமும் உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைரமுத்து கூறியதாவது, ”தமிழில் அறிவியல் இல்லாமல் இல்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை அறிவியலில் சிறந்தவன் தமிழன். சில வழிபாட்டாளர்களின் படையெடுப்புகளின் அடிமைத்தனத்தால் பின்னடைவு ஏற்பட்டது. இதனை மீண்டும் வளர்த்தெடுக்க அறிவியல் கல்வி தமிழில் வழங்க படவேண்டும்” என்றார்.
வெளிநாடுகளில் எலெட்ரிசிட்டி, ராகெட், டெலிவிஷன் போன்ற பொருள்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அதற்கு பெயரை மட்டும் நாம் மின்சாரம், ஏவுகணை, தொலைக்காட்சி பெட்டி என கண்டுபிடித்து தமிழில் பெயர் சூட்டுகிறோம். இதனால் நாம் சொல் கண்டு பிடிப்பாளர்களாகவே இருக்கிறோம்.
இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழும் வேண்டும் அதனுடன் அறிவியல் தமிழும் சேர வேண்டும். தமிழில் முழுமையாகக் கல்வி கற்றால் கண்டுபிடிப்பாளராக மாறுவான். அதற்கு எடுத்துகாட்டாக, அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் உள்ளனர்.
8 மணி நேரம் ஒரே இடத்தில் காத்திருக்க காரணம் என்ன? எழுத்தறிவு பெற்றவர் எல்லாம் அறிவுள்ளவர்களா, அறிவுள்ளவர்கள் எள்ளோருக்கும் வேலை கிடைத்துவிட்டதா இல்லை. இதனால்தான் 8 மணி நேரம் மட்டும் அல்ல 16 மணி நேரமும் நிற்கிறான், இலவசத்தை எதிர்பார்க்கிறான்.
யாருக்கு இலவசம் வேண்டும் முதியோர் மற்றும் இயலாமையில் உள்ளோருக்கு வேண்டும். இயல்பவர்களுக்கு வேலை மட்டுமே வேண்டும். அந்த வேலை இல்லா நிலை தற்போது உள்ளது. இதற்கு ஆண்ட கட்சிகள் முன்னெடுப்பு செய்தும் முழுமை பெறவில்லை எனக் கூறினார்.
தமிழனின் வாழ்க்கைக்கு அறிவியல் வேண்டும். அப்போதுதான் தமிழன் உலக மாந்தர் ஆக உயர்வான். இதனால் அறிவியலில் தமிழ் மகுடம் சூட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறேன் என திரைப்பட பாடல் ஆசிரியர் மற்றும் கவிஞருமான கவிப்பேரரசு தெரிவித்துள்ளாா்.


