
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று முன்தினம் (அக்.22) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வந்ததாகவும், அது தொடர்ந்து நேற்று வரை (அக்.23) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்ததாகவும், இதன்காரணமாக இன்றைய தினம் ( அக்.24) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படியே இன்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவான 2வது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.


