இங்கு உட்கார்ந்திருக்கும் உங்கள் மனதில், இப்பொழுது என்ன ஓடிக்கொண்டிருக்கும் என்பது எனக்கு நன்றாக தெரியும். தலைவா் அமைதியாக இருக்க மாட்டாா். நம்மையும் அமைதியாக இருக்க விடமாட்டாா் என்று சிலர் நினைப்பீா்கள். நாம் சுணங்கி சும்மா இருந்துவிட்டால், ஒரே இடத்தில் தேங்கிடுவோம்! அது தேக்கம்! உழைப்பைக் கொடுத்து லட்சியத்தை நோக்கி இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். அதுதான் இயக்கம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டா்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளாா்.
மாமல்லபுரத்தில் நடந்த திமுக நிர்வாகிகளுக்கான தேர்தல் பயிற்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
“நம்முடைய இயக்கம் எந்நாளும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பதற்கு அடித்தளமான உங்களை நம்பி, என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற முழக்கத்தை முன்னெடுத்திருக்கோம்! உங்களுடைய உழைப்பில், ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நாம், அடுத்து ஏழாவது முறையாவும் ஆட்சி அமைக்க வேண்டும். அதற்குத்தான் இந்தப் பயிற்சிக் கூட்டம்.

எப்போதும் மக்கள் கூடவே இருந்து பணியாற்றும் உங்களுக்கு, இந்த பயிற்சிக் கூட்டம் என்பது, தோ்வுக்கு தயாராகும் மாணவா்களை போல், எல்லாவற்றையும் படித்த பிறகு, மீண்டும் ஒரு முறை ரிவிஷன் செய்வது போல, தோ்தல் எனும் எக்ஸாமிற்கு முன் நாம் செய்யும் ரிவிஷன்தான், இந்தப் பயிற்சிக் கூட்டம்.
2019 ஆம் ஆண்டு முதல், நாம் எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும், மகத்தான வெற்றிகளை பெற்று வருகிறோம்! நம்முடைய வெற்றிகள், நம் எதிரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 2026 ஆம் ஆண்டு தேர்தலிலும் நாம் தான் வெற்றி பெறுவோம். அன்று “திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடங்கியது!” என்பது தான் ஹெட்லைன்ஸ்! இதை நான் ஆணவத்தில் கூறவில்லை! உங்கள் உழைப்பு மற்றும் ஆட்சியின் சாதனைகள் அனைத்திலும் தமிழ்நாட்டு மக்கள் நம் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையில் தான் சொல்கிறேன்.
நம்முடைய திராவிட மாடல் அரசோட திட்டங்களும், சாதனைகளும், கோடிக்கணக்கான மக்களுடைய உள்ளங்களிலும் இல்லங்களிலும் சேர்ந்திருக்கும். லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையில் ஏற்றத்தையும், தொழில்துறையில் மிகப்பெரிய பாய்ச்சலையும், கல்வித் துறையில் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கின்ற நம்முடைய திட்டங்களும் சாதனைகளும் தான் திராவிட மாடலின் நம்முடைய அடையாளம்.
இந்தியாவில் எந்த மாநில அரசும் இம்மாதிாி சாதனைகளை செய்திருக்கமாட்டாா்கள். மீதமிருக்கும் சில வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றி தருவோம்.
நம்ம அரசு செய்த சாதனைகளால்தான் நம்மால் தைரியமாக எல்லோர் வீட்டுக்கும் போய், ஆதரவு கேட்க முடிகின்றது. ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்கு செய்திருக்க துரோகங்களையும், நிதி ஒதுக்கீடுகளில் செய்து இருக்கும் வஞ்சகங்களையும் எடுத்துச் சொல்லி, தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! என தமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு வீட்டிற்க்கும் சென்று இந்த மாபெரும் முன்னெடுப்பை வெற்றியடைய செய்த, கழகத்தின் ரத்த நாளங்களான உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்கும், இந்த மேடையில், என்னுடைய பாராட்டுகளை, இந்த சல்யூட் மூலமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் ஏற்படுத்துகின்ற சுயமரியாதை உணர்வால் தான், பா.ஜ.க.வின் பாசிச ஆட்சிக்கு அடிபணியாமல், முதுகெலும்போடு எதிர்த்து நிற்கிறோம். எதிர்த்து நிற்கின்றது மட்டுமில்ல, விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வைத்தது மாதிரியான பல போராட்டங்களில் வெற்றியும் பெற்றிருக்கின்றோம். இப்பொழுது கூட, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக ஏழு மாநில முதலமைச்சர்களை ஒன்றிணைத்தோம். அகில இந்திய மருத்துவப் படிப்பு ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடியும், வாதாடியும் வெற்றி பெற்றோம். இதையெல்லாம் பார்த்துதான், பா.ஜ.க.வுக்கு நம் மேல் கோபம் வருகிறது. அதனால் தான், பல்வேறு சூழ்ச்சிகளில் அவா்கள் ஈடுபடுகிறாா்கள்.
இந்த நிலைமையில்தான் அடுத்தகட்டமாக நமக்கு காத்திருக்கும் பணிகள் என்ன, அதை எப்படியெல்லாம் செய்ய வேண்டும், தலைமை முதல் தொண்டர்கள் வரை எப்படி ஒருங்கிணைந்து ஒரே இலக்கோட செயல்பட வேண்டும் என விவாதித்து, அதை களத்தில் செயல்படுத்த தான் – இந்த பயிற்சிக் கூட்டம்!
கழக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மாநிலங்களவை மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழகச் செயலாளர்கள் என்று எல்லோரும் வந்திருக்கிறாா்கள். உங்கள் எல்லோரையும் ஒன்றாக பார்க்கும் பொழுது, உங்கள் முகங்களில் நான் உதயசூரியனை பாா்க்கின்றேன். அதனைத் தமிழ்நாட்டு மக்களின் இதயசூரியனாக மாற்ற வேண்டிய கடமையும்,பொறுப்பும் உங்களுக்குத் தான் இருக்கின்றது.
இந்த பயிற்சி கூட்டத்துக்குப் பிறகு ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும், ஏற்கெனவே அமைக்கப்பட்டிருக்கும் பாக முகவர்கள், பாக உறுப்பினர்கள் குழு, பாக டிஜிட்டல் ஏஜென்ட், பாக இளைஞர் அணி, பாக மகளிரணி, பாகத்திற்குட்பட்ட கிளை, வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைந்து ”என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி“ என்று முன்னெடுக்க வேண்டும். மாநில நிர்வாகியாக இருந்தாலும் கூட அவரவர் வாக்குச்சாவடியில் வெற்றி பெறுவது இலக்காக இருக்க வேண்டும். நானே கூட என்னோட வாக்குச்சாவடியில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்று, அங்கே நம்முடைய வெற்றியை உறுதி செய்வதற்கான பரப்புரையில் ஈடுபடுவேன்.
ஒவ்வொரு ஒன்றிய, பகுதி, பேரூர் செயலாளரும், தனக்கு கீழ் வருகின்ற ஒவ்வொரு பூத்துக்கும் தனித்தனி கூட்டங்களை தினமும் மாலை வேளையில் நடத்த வேண்டும். இந்த கூட்டங்களில் அந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட சார்பு அணி நிர்வாகிகள் இருந்து, மாநில நிர்வாகிகள் வரை எல்லா நிர்வாகிகளும், தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டும். இந்த கூட்டங்களில், ஒவ்வொரு பூத்துக்கும் ஒரு டார்கெட்டை செட் செய்திருக்க வேண்டும். இப்படி, பூத்வாரியாக நடத்துகின்ற கூட்டங்கள், அதில் நீங்கள் நிர்ணயித்திருக்கின்ற இலக்கு, இப்படி எல்லா தகவல்களும் அடங்கின ஷீட்டை மாவட்டச் செயலாளர் மூலமாக எனக்கு அனுப்பி வைக்க வேண்டும். வாராவாரம் நீங்கள் அனுப்புவதை பார்த்து விட்டு, நானே உங்களுக்கு போன் செய்து விசாரிப்பேன் என்பதை மறந்து விடாதீா்கள்.
2026-ல் நடக்க இருக்க ஜனநாயகத் தேர்தல், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற தேர்தல். தனித்தன்மையோடு தலைநிமிர்ந்து நிற்கின்ற நம்முடைய ஆட்சியா, டெல்லிக்கு வளைந்து கொடுக்கின்ற அடிமைகளின் ஆட்சியா என்று தீர்மானிக்கின்ற தேர்தல். தமிழ்நாட்டின் சுயமரியாதையையும், தனித்தன்மையையும் காப்பாற்றுகின்ற தேர்தல்.
தமிழ்நாட்டை அழிக்க, இன எதிரிகளும், தமிழ்த் துரோகிகளும், நேரடியாகவும், மறைமுகமாகவும் வருகிறாா்கள். இவா்களை வீழ்த்தி நம்முடைய மண், மொழி, மானத்தை காக்க வேண்டும். அதற்கு தான் திமுக கூட்டணி அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றி ஆக வேண்டும் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே வருகின்றேன்.
தமிழ்நாடு இப்பொழுது சமூக, அரசியல், பொருளாதார படையெடுப்பை சந்தித்து வருகின்றது. தமிழ்நாட்டுக்கு எல்லா வகையிலும் அநீதி இழைக்கப்படுகிறது. இந்தியின் பெயரால், சமஸ்கிருதத்தின் பெயரால், ஜி.எஸ்.டி.யின் பெயரால், புதிய கல்விக் கொள்கையால், நீட் தேர்வால், சட்டங்களால், உத்தரவுகளால், ஆளுநரால் என தொல்லைக்கு மேல் தொல்லை கொடுக்கிறாா்கள். இது தமிழ்நாட்டின் மேல் தொடுக்கப்படும் தாக்குதல். இந்த தாக்குதலை முறியடிக்கின்ற வல்லமை நமக்குதான் இருக்கிறது. பா.ஜ.க.வின் பகல் கனவு தி.மு.க. இந்த மண்ணில் இருக்கும்வரை நிறைவேறாது. அவா்களுக்கும் அது நன்றாக தெரியும். ஆனாலும், புதுசு புதுசா குறுக்குவழிகளைத் தேடுகிறாா்கள்.
உழைக்கும் மக்கள், பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களை S.I.R. மூலமாக, வாக்காளர் பட்டியலிருந்து நீக்கிவிட்டால், பா.ஜ.க.வும் அதன் கூட்டாளியான அ.தி.மு.கவும் வெற்றி பெற்று விடலாம் என்று கணக்கு போடுகிறாா்கள். அதாவது, நேரடியாக தேர்தல் களத்தில் மக்களைச் சந்திக்கும் தெம்போ திராணியோ இல்லாதவா்கள், மக்களோட வாக்குரிமையை பறித்து கொண்டு வெற்றி பெறலாம் என தப்புக் கணக்கு போடுகிறாா்கள்.
S.I.R. முறையை கைவிட வேண்டும் என்பதையும், வாக்காளர் பட்டியலைச் சீர்ப்படுத்த வேண்டும் என்றால், அதற்குரிய வழிமுறைகளைப் பின்பற்றி, கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்பதையும், இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நேரடியாகவே தி.மு.கழகம் வலியுறுத்தியது. அதையும் மீறி முன்னெடுக்கப்படுகின்ற ஜனநாயக விரோத செயல்பாடுகளை, சட்டரீதியாக எதிர்கொள்வது மட்டுமில்லாமல், மக்களோடு நின்று களத்திலும் எதிர்கொள்கின்ற வலிமை நமக்கு உண்டு, இன்னும் சொல்லப்போனால், நமக்கு மட்டும்தான் உண்டு!
மக்களின் வாக்குரிமையையே பறிக்கத் துணிகின்ற S.I.R. செயல்பாட்டை விழிப்போட கண்காணிக்க வேண்டும். உண்மையான வாக்காளர் எல்லோரும், வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும். அதை உறுதி செய்ய வேண்டியது உங்களுடைய பொறுப்பு. எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற பழனிசாமி, பெயரளவுக்காவது திராவிட கட்சியாக இருந்த, அந்தக் கட்சியை, அமித்ஷாகிட்ட விழுந்து சரண்டர் செய்துவிட்டாா்.
அந்தக் கூட்டணியை தமிழ்நாட்டு மக்களும் விரும்பவில்லை; அவா்களுடைய கட்சிக்காரா்களும் விரும்பவில்லை. மற்ற கட்சியினரும் அந்தக் கூட்டணிக்கு போகவில்லை. வி.சி.க. வருகிறாா்கள். கம்யூனிஸ்ட்டுகள் வருகிறாா்கள். காங்கிரஸ் வருகிறாா்கள் என்று அவரும் தினமும் கூறி பார்த்தார். ஆனால் யாரும் அங்கே போகவில்லை. மக்களும் அவர் பேசுவதை நம்பத் தயாராக இல்லை.
தமிழ்நாட்டுக்கு எதிராக கூட்டணி அமைக்கின்ற அவா்களுடைய சந்தர்ப்பவாதத்தை மக்களிடம் எடுத்துச் கூறி, அவங்களுடைய நம்பிக்கையை பெற்று, அதை நம்முடைய கூட்டணிக்கான வாக்குகளாக மாற்ற வேண்டும். அந்த கடமையும் பொறுப்பும் உங்களுக்குத்தான் இருக்கின்றது.
திராவிட முன்னேற்றக் கழகம் ஏழாவது முறையும் ஏற்றமிகு ஆட்சியை அமைக்க வேண்டும். தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளும் தகுதி திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத்தான் இருக்கின்றது என்று நிரூபிக்க வேண்டும். கலைஞரின் உடன்பிறப்புகள், நினைத்ததை செய்து காட்டுகிறவா்கள் என்று புரிய வைக்க வேண்டும்.
என்னுடைய அழைப்பை ஏற்று, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து வந்த நிர்வாகிகள் அனைவரும், இந்தச் செய்தியை உங்கள் மாவட்டத்துக்கு, நகரத்துக்கு மற்றும் கிராமத்துக்கு எடுத்துச் செல்லுங்கள். நான் கூறியதை கூறுங்கள். நான் கேட்டுக்கொண்டதை சொல்லுங்கள். ஒவ்வொரு தொண்டரையும் நான் விசாரித்ததாக சொல்லுங்கள். நான் உழைக்கச் வேண்டும் என்று கூறியதை சொல்லுங்கள். நான் அவா்களைத் தான் நம்பி இருக்கின்றேன் என்று சொல்லுங்கள். தொண்டர்கள் இருக்கின்ற தைரியத்தில் தான் தலைவர் இருக்கிறாா் என்று மறைக்காமல் சொல்லுங்கள்” என்று மாமல்லபுரத்தில் நடைப்பெற் திமுக நிர்வாகிகளுக்கான தேர்தல் பயிற்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கினாா்.


