பிரபல இயக்குனர் ஒருவர் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்கிறார் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து பெயர் பெற்றுள்ளார். மேலும் இவர் ஹீரோவாகவும் வில்லனாகவும் கலக்கி வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் மகாராஜா திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. அதைக் கடந்து விஜய் சேதுபதி, கடைக்குட்டி சிங்கம், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இப்படத்தில் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடித்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்திருந்தது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பாக சத்தம் இல்லாமல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிகை நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் பிரபல இயக்குனர் மிஸ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். அதாவது விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்கிறாராம். ஏற்கனவே இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ட்ரெயின் திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் இயக்குனர் மிஸ்கின், சிவகார்த்திகேயனின் மாவீரன், லியோ உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.