மோடியிடம் சென்று பேசியது என்ன? மெளனம் கலைத்த உதயநிதி
டெல்லியில் பாரத பிரதமரை நேரில் சந்தித்தபோது தமிழ்நாட்டு மருத்துவ மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்யும்வரை தமிழ்நாட்டில் திமுக அரசின் சட்ட போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கும் என்று சொல்லிவிட்டு வந்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களில் நிறைவுற்றஅரசுத் திட்டங்களை தொடங்கிவைத்து உரையாற்றிய மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நீட் தேர்வை எதிர்த்து போராடி உயிர்நீத்த மாணவி அனிதாவின் பெயரை அரியலூர் மருத்துவ கல்லூரிக்கு வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை சட்டமன்றத்தில் எனது முதல் சட்டபேரவை உரையின்போது பேசியிருக்தேன். இன்று அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவ சேவையை துவக்கிவைக்க வந்தபோது முதல்வர் ஸ்டாலின் முதலில் மாணவி அனிதாவின் நினைவு அரங்கை திறந்துவைக்க சொன்னார். அவரது உத்தரவின்பேரில் ரூபாய் 22 லட்சம் மதிப்பில் 85 பேர் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மாணவி அனிதா நினைவு அரங்கத்தை திறந்துவைத்து நீட் தேர்வு எதிர்ப்பு நிலைப்பாட்டை உறுதிபடுத்தியுள்ளோம்.

தமிழ்நாட்டில் 2.5 கோடி முறை பெண்கள் பயணித்து பயன்பெற்றுள்ள இந்தியாவின்முன்னோடி திட்டம் பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம். இந்த அரியலூர் மண்ணுக்கு சொந்தகாரர் அமைச்சர் சிவசங்கர் அந்த துறையில் அமைச்சராய் இருக்கிறார். சுமார் ஒரு கோடியே 10 ஆயிரம்பேர் பயன்பெற்றுள்ள மக்களை தேடி மருத்துவம், 2 லட்சம் மாணவிகள் பயன்பெற்றுள்ள புதுமை பெண் திட்டம், 20 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ள காலை உணவு திட்டம் மற்றும் இல்லம் தேடி கல்வி திட்டம் என திமுக அரசு எண்ணற்ற திட்டங்களை கொண்டுவந்துள்ளது. இந்த திட்டங்களின் மூலம் வருங்காலங்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் பயன்பெறுவார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வதாக தாக கூறியது என்னாச்சு என்று மாநில எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேட்கிறார். பாரத பிரதமரை நேரில் சந்தித்தபோது தமிழ்நாட்டு மருத்துவ மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்யும்வரை திமுக அரசின் சட்டப் போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடமே நேரில் சொல்லிவிட்டு வந்துள்ளதை தெரிவித்து கொள்ளேன்” என்றார்.