spot_imgspot_img
Homeதிருக்குறள்3 - நீத்தார் பெருமை

3 – நீத்தார் பெருமை

-

- Advertisement -

3.நீத்தார் பெருமை

21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
      வேண்டும் பனுவல் துணிவு.

கலைஞர் குறல் விளக்கம் – ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும் உயர்வாகவும் இடம் பெறும்.

22. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
     இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

கலைஞர் குறல் விளக்கம்  – உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது.

we-r-hiring

23. இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
      பெருமை பிறங்கிற் றுலகு

கலைஞர் குறல் விளக்கம் – நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக் குரியவர்களாவார்கள்.

24. உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
      வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.

கலைஞர் குறல் விளக்கம்  – உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்.

25. ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
      இந்திரனே சாலுங் கரி

கலைஞர் குறல் விளக்கம் – புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.

26. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
      செயற்கரிய செய்கலா தார்.

கலைஞர் குறல் விளக்கம் – பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச், செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும்.

27. சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
      வகைதெரிவான் கட்டே உலகு.

கலைஞர் குறல் விளக்கம் – ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்.

28. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
      மறைமொழி காட்டி விடும்.

கலைஞர் குறல் விளக்கம் – சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.

29. குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
      கணமேயுங் காத்தல் அரிது.

கலைஞர் குறல் விளக்கம் – குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.

30. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
      செந்தண்மை பூண்டொழுக லான்.

கலைஞர் குறல் விளக்கம் – அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.

MUST READ