சபரிமலை ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக திண்டுக்கல் – சபரிமலை இடையே ரயில் பாதை அமைக்கப்படும். 201 கி.மீ தூரம் சர்வே பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் பணிகள் துவங்கப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் உறுப்பினர் ஒருவர் தேனி வரை அமைக்கப்பட்டுள்ள ரயில்வே பாதை குமுளி வழியாக இடுக்கி மாவட்டம் வரை நீட்டிக்கப்படுவதற்கான திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா? குமுளியில் இருந்து ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக எரிமேலி வரை ரயில் நீட்டிப்பு செய்யக்கூடிய திட்டமும் மத்திய அரசிடம் உள்ளதா? என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்,
திண்டுக்கல்லில் இருந்து தேனி, போடிநாயக்கனூர் வழியாக 133.6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குமுளிக்கு புதிய ரயில் பாதை அமைப்பதற்கான அளவீட்டுப் பணிகள் கடந்த 2014ம் ஆண்டு முடிந்தது. இதேபோல் திண்டுக்கல் – சபரிமலைக்கு இடையிலான 201 கிலோமீட்டர் தூரமுள்ள புதிய அகல ரயில் பாதை அமைப்பதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு அதற்கான அளவீட்டு பணிகளும் நடைபெற்று வருவதாகவும் அளவீட்டு பணிகள் முழுமை அடைந்தவுடன் திட்ட பணிகள் துவங்கப்படும் எனவும் மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சபரிமலைக்கு ரயில் பாதை அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில் குமுளியிலிருந்து எரிமேலி வரை ரயில் பாதை அமைப்பதற்கான எந்த ஒரு முன்மொழிவும் கேரள ரயில்வே வாரியத்திடமிருந்து கிடைக்கப்பெறவில்லை என மத்திய ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.