பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்குழுவினருடன் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று தனியார் மண்டபத்தில் சந்தித்து பேசுகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 900 நாட்களுக்க மேலாக போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை இன்று நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் சந்திக்க அனுமதி கோரியிருந்தார். தவெக சார்பில் ஏகனாபுரத்தில் உள்ள அம்பேத்கர் திடலில் சந்திப்பு நடைபெற கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியை பரந்தூரில் உள்ள வீனஸ் திருமண மண்டபத்தில்தான் நடத்த போலீசார் தரப்பில் கூறப்பட்டது. இதனால் விஜய் மக்களை சந்திப்பதற்கான இடம் ஒதுக்குவதில் நேற்று இரவு வரை இழுபறி நீடித்தது.
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் தவெக தலைவர் விஜய் பரந்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மட்டுமே மக்களை சந்திக்க நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இன்று பகல் 12 மணி முதல் 1 மணி வரை மட்டுமே மக்களை சந்திக்க காவல்துறை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்ட வாகனங்களில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் தான் வர வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.