நடிகர் சூர்யா மீண்டும் காதல் கதையில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சூர்யா தற்போது ரெட்ரோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் 2025 மே 1 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இவர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தின் தனது 45வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் நடிகர் சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு சில வருடங்களுக்கு முன்பாகவே வெளியாகி நடிகர் சூர்யா காளைகளை அடக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் வெற்றிமாறன் விடுதலை 2 திரைப்படத்தில் பிஸியானதால் வாடிவாசல் தள்ளிப்போனது. ஆனால் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் முதல் பாதியில் தொடங்கிவிடும் என தகவல்களும் வெளியானது. ஆனால் தற்போது சூர்யா வாடிவாசல் திரைப்படத்தை ஓரங்கட்டி வைத்துவிட்டு மீண்டும் காதல் கதையில் நடிக்கப் போவதாக தகவல் கசிந்துள்ளது.

அதாவது நடிகர் சூர்யா, வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்களின் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46 ஆவது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என சமீபகாலமாக பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதன்படி இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்க உள்ளார் எனவும் சொல்லப்படுகிறது. இது தவிர அனுபமா பரமேஸ்வரன், நிதி அகர்வால், பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படமானதும் வாரணம் ஆயிரம் படத்தினை போல் முழுக்க முழுக்க காதல் கதையில் உருவாக இருப்பதாகவும் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இரண்டே கட்ட படப்பிடிப்பில் பரபரப்பாக இந்த படத்தை முடிக்க படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தெரிய வந்திருக்கிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.