அதிமுக இனி ஓஹோ என வளரும்- எடப்பாடி பழனிசாமி
அதிமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக இனி ஓஹோ என வளரும் என்று எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்ப்பு மற்றும் உறுப்பினர்கள் புதுப்பித்தல் விண்ணப்பப் படிவங்கள் இன்று முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்பப் படிவங்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி , முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, டாக்டர் விஜயபாஸ்கர், காமராஜ், பொள்ளாச்சி, ஜெயராமன் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி, “இன்று பங்குனி உத்திரம் பெளர்ணமி நல்ல நாளில் அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை தொடங்கி உள்ளதால், இனி அதிமுக ஓஹோ என வளரும். தற்போது ஒன்றரை கோடி தொண்டர்கள் அதிமுகவில் இருக்கும் நிலையில், இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளோம். அதிமுகவில்தான் சாதாரண தொண்டன் கூட பொதுச்செயலாளர் ஆக முடியும், ஜெயலலிதா மறைவுக்கு பின் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தோம். ஏகமனதாக என்னை பொதுச்செயலாளராக தேர்வு செய்த அனைவரும் நன்றி, இனி எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திருமண உதவித் திட்டம், மடிக்கணினித் திட்டம், அம்மா இருசக்கர வாகனத் திட்டம் உட்பட அனைத்தையும் நிறுத்தி விட்டார்கள். இந்தியாவிலேயே சிறப்பான மருத்துவமனை வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது அதிமுக அரசு” எனக் கூறினார்.


