Homeசெய்திகள்தமிழ்நாடுகரும்புக்கு ரூ.5000 கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் - இராமதாஸ் வலியுறுத்தல்!

கரும்புக்கு ரூ.5000 கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் – இராமதாஸ் வலியுறுத்தல்!

-

- Advertisement -

கரும்பு கொள்முதல் விலை ரூ.139 மட்டும் உயர்த்துவது போதாது, டன்னுக்கு ரூ.5000 வழங்க அரசுகள் முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளாா்.கரும்புக்கு ரூ.5000 கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் - இராமதாஸ்  வலியுறுத்தல்!மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகள் கொள்முதல் செய்யும் 10.25% சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கான கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.3,550 வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் 9.5% மற்றும் அதற்கும் குறைவான சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புகளுக்கு டன்னுக்கு ரூ.3,290 கொள்முதல் விலையாக வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இது எந்த வகையிலும் போதுமானதல்ல.

2024-25ஆம் ஆண்டில் 9.50% சர்க்கரைத்  திறன் கொண்ட கரும்புக்கு டன்னுக்கு ரூ. 3,151 கொள்முதல் விலையாக வழங்கப்பட்டது. இப்போது ரூ.139, அதாவது 4.41% மட்டுமே கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.  கரும்புக்கான சாகுபடி செலவுகள் பெருமளவில் உயர்ந்துள்ள நிலையில், 4.41% மட்டும் விலையை உயர்த்துவது நியாயமற்றது. இது உற்பத்திச் செலவை ஈடு செய்வதற்கு கூட போதாது.

தமிழ்நாட்டில் ஒரு டன் கரும்புக்கு ரூ.5500 வழங்கப்பட வேண்டும் என்பது தான் உழவர் அமைப்புகளின் கோரிக்கை ஆகும். ஒரு டன் கரும்பு உற்பத்தி செய்ய ரூ.3500 வரை செலவாவதாக உழவர்கள் கூறுகின்றனர். அதனுடன் 50% லாபமாக ரூ.1750 மற்றும் போக்குவரத்துச் செலவு சேர்த்து டன்னுக்கு ரூ.5500 வழங்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின்  நிலைப்பாடும் ஆகும். ஆனால், உற்பத்தி செலவை விட குறைவாக தொகையை கொள்முதல் விலையாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

கரும்புக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு குறைவாக நிர்ணயித்தால், அதனால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் உழவர்களுக்கு மாநில அரசுகள் ஊக்கத்தொகை வழங்குவது வாடிக்கை.  அதன்படி கடந்த ஆண்டு மத்திய அரசு நிர்ணயித்த விலையுடன், தமிழகஅரசு ரூ.349 ஊக்கத்தொகை சேர்த்து கரும்புக்கு டன்னுக்கு ரூ.3500 கிடைக்க வகை செய்தது. நடப்பாண்டில்  டன்னுக்கு ரூ.3700 கிடைக்கும் வகையில்  ரூ.410 ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு முன்வரலாம் என்று கூறப்படுகிறது. இதுவும் கூட போதுமானதல்ல. பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஆண்டில் ஒரு டன் கரும்புக்கு ரூ.4100 கொள்முதல் விலை வழங்கப்பட்டது.  நடப்பாண்டில் அது ரூ.4500 ஆக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனுடன் ஒப்பிடும் போது தமிழக அரசு வழங்கவிருக்கும் கொள்முதல் யானைப்பசிக்கு சோளப்பொரியாகவே பார்க்கப்படும்.

2016-ஆம் ஆண்டு வரை ஒரு டன் கரும்புக்கு ரூ.750 வீதம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வந்தது. 2017-ஆம் ஆண்டில் அது நிறுத்தப்பட்டுவிட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஊக்கத்தொகையை மீண்டும் வழங்குவோம் என்று அறிவித்தது. அவ்வாறு வழங்கப்பட்டிருந்தால் அது இப்போது டன்னுக்கு ரூ.1100 ஆக அதிகரித்திருக்கும்.  அத்தகைய சூழலில் தமிழ்நாட்டில் ஒரு டன்  கரும்புக்கு  ரூ. 4,390 ஆக உயரக் கூடும். அது ஓரளவு கட்டுப்படியாகக் கூடிய விலையாக இருந்திருக்கும். ஆனால், திமுக, சட்டப் பேரவைத் தேர்தலில் அளித்த அதன் வாக்குறுதியை நிறைவேற்ற மறுப்பதால் உழவர்களின் துயரம் தீரவில்லை.

2011-12ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடி செய்யப்படும் பரப்பு 8 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலாக இருந்தது. ஆனால், நடப்பாண்டில் அது 2.25 லட்சம் ஏக்கராக குறைந்து விட்டது. அதற்கு காரணம் கரும்புக்கு நியாயமான விலை கிடைக்காதது தான்.  இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்நாடு கரும்பு விளையாத மாநிலமாக மாறிவிடும்.  அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிடாமல் மத்திய மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்.

கரும்பு கொள்முதல் விலை தொடர்பாக மத்திய அரசுடன் தமிழக அரசு உடனடியாக பேச்சு நடத்தி ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலையாக   ரூ.4,000 நிர்ணயிக்க வகை செய்ய வேண்டும். அத்துடன் தமிழக அரசின் சார்பில் டன்னுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கி உழவர்களுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.5000 கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளாா்.

திருப்பத்தூரில் கரடி குதறியதால் பெண் படுகாயம்!

MUST READ