டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் திரைவிமர்சனம்.
அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கமலேஷ், ரமேஷ் திலக் ஆகியோரின் நடிப்பில் இன்று ( மே 1) உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க ஷான் ரோல்டன் இதற்கு இசையமைத்துள்ளார். அரவிந்த் விஸ்வநாதன் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். தற்போது இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
இலங்கையில் ஏற்படும் பொருளாதார கஷ்டத்தினால் சசிகுமார்- சிம்ரன் குடும்பம் தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். ராமேஸ்வரம் வரும் இந்த குடும்பம் காவல்துறையினரிடம் சிக்கிக் கொள்ள, காவல் அதிகாரியான ரமேஷ் திலக் அவர்களின் நிலைமையை புரிந்து கொண்டு அவர்களை விட்டு விடுகிறார். அதன் பின்னர் யோகி பாபுவின் உதவியுடன் சென்னை வரும் சசிகுமார் – சிம்ரன் குடும்பம் தங்களை இலங்கை தமிழர்கள் என்பதை மறைத்து பக்கம் பக்கத்தினடன் அன்பாக பழகுகிறார்கள். சசிகுமாருக்கும் வேலை கிடைக்கிறது. அதன் பிறகு அவர்களின் வாழ்க்கை சுமூகமாக செல்கிறது. ஒரு கட்டத்தில் ராமேஸ்வரத்தில் திடீரென குண்டு வெடிப்பு ஏற்பட சசிகுமாரின் குடும்பத்தின் மீது சந்தேகம் எழுகிறது. எனவே காவல் துறையினர் அவர்களை பிடிக்க மிகத் தீவிரமாக தேடி அலைகிறார்கள். கஷ்டங்களைக் கடந்து நிம்மதியாக சென்னையில் வாழும் சசிகுமார் – சிம்ரன் குடும்பம் இந்த பிரச்சனையிலிருந்து மீண்டதா? என்பதை நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான கதைக்களத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்.
இலங்கையிலிருந்து தன்னுடைய குடும்பத்தை அழைத்து சென்னைக்கு வரும் சசிகுமார், பொறுப்பான, பாதுகாப்பான ஒரு குடும்பத் தலைவனாக திரையில் ஜொலிக்கிறார். அதேபோல் குடும்பத்தை தாங்கி நிற்கும் தூணாக நடிகை சிம்ரன் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சசிகுமார் – சிம்ரனின் மகன்களாக நடித்திருக்கும் மிதுன், கமலேஷ் இருவரின் நடிப்பும் வேற ரகம். அதிலும் இளைய மகனாக நடித்துள்ள கமலேஷின் நடிப்பை பற்றி வார்த்தைகளால் சொல்ல முடியாது. அந்த அளவிற்கு மற்றவர்களையே தூக்கி சாப்பிட்டு விடுகிறார். இது தவிர யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி ஆகியோரின் தங்களுக்கான கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்துள்ளனர். படத்தில் இடம்பெற்ற எதார்த்தமான, மனதை வருடும் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ். ஒவ்வொரு கதாபாத்திரங்களின் தேர்வும் அருமை. அதேசமயம் இசை, ஒளிப்பதிவு படத்திற்கு முதுகெலும்பாக இருக்கிறது. இந்த படத்தை பார்த்தால் இயக்குனர் அபிஷனை, அறிமுக இயக்குனர் என்று யாருமே சொல்ல மாட்டார்கள். அந்த அளவிற்கு திரைக்கதையை எதார்த்தமாகவும், கவனமாகவும் கையாண்டுள்ளார். ‘மனிதநேயம் இருக்கின்ற இடத்தில் அகதி என்ற சொல்லுக்கே இடமில்லை’ என்பதை அழுத்தமாக கூறியுள்ளார் அபிஷன். மொத்தத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி – குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி.