திராவிடம் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய அதிமுக இன்று திராவிட இயக்கமாக இல்லை. அது எந்த காலத்திலும் இருந்ததில்லை என்று திமுக துணைப் பொது செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூரில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் கனிமொழி கலந்து கொண்டு மேலும் பேசியதாவது.

தற்போது அவர்கள் யாரோடு கைகோர்த்து நின்று கொண்டிருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். நம்ம வீட்டு பிள்ளைகள் படிக்க கூடாது, நம்ம வீட்டு பிள்ளைகள் டாக்டராகக் கூடாது, நம்ம வீட்டு பிள்ளைகள் கல்லூரிக்கு போய் படித்து ஒரு நல்ல நிலைமைக்கு வந்து விடக் கூடாது என்று அனைத்து துறைகளிலும் நுழைவு தேர்வை கொண்டு வந்து நுழைத்துக் கொண்டிருக்க கூடிய பாஜகவோடு அதிமுகவினர் கைகோர்த்து கொண்டிருக்கிறார்கள் என்றார்.
அதனால் தமிழ்நாட்டை காக்க வேண்டிய கடமை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்று பேசிய கனிமொழி, அதைத்தான் நம்முடைய முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்கள் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார் ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டு மக்களுக்காக, அவர்களுடைய உரிமைகளுக்காக, அவர்களுடைய எதிர்காலத்திற்காக திட்டங்களை வகுத்து நமக்காக உழைத்துக் கொண்டிருக்க கூடிய நம்முடைய முதலமைச்சர் அவர்கள் நம்மிடம் இருந்து எதிர்பார்ப்பது நாம் அத்தனை பேரும் ஒன்றுபட்டு நின்று தேர்தலை சந்திக்க வேண்டும். இயக்கத்திற்காக பாடுபட வேண்டும் என்பதுதான் அவர் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கக் கூடிய ஒன்று என்றார்.
நம்மை எதிர்த்து விடலாம், வீழ்த்தி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கக் கூடியவர்கள் திமுக இந்துக்களுக்கு எதிரானவர்கள், திமுக இவர்களுக்கு எதிரானவர்கள் அவர்களுக்கு எதிரானவர்கள் என்று ஒவ்வொரு முறையும் பல பொய்யுரைகளை தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் மேடை போட்டும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் என்று கனிமொழி பேசினார்.




