ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் அரசிதழில் வெளியானது
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததை அடுத்து, ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் தமிழக அரசின் அரசிதழில் வெளியானது.
சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானத்தில், ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடைச் சட்டம் குறித்த மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டு, நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் இதனால் தமிழ்நாட்டின் நிர்வாக நலனும், இளைஞர்களின் எதிர்காலமும் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் திமுக தலைமையிலான அரசு எடுத்துக்காட்டி இருந்தது. பொது வெளியில் ஆளுநர் அவர்கள் தெரிவித்து வரும் சர்ச்சைக்குரிய கருத்துக்களும் தீர்மானத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், ஆளுநர் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பான மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து இந்தச் சட்டமானது உடனே தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மாதம் சிறை (அ) ரூ.5,000 அபராதம் (அ) இரண்டுமே விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.