பேரவை நடுநிலையாக செயல்படவில்லை- எடப்பாடி பழனிசாமி
சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “விருத்தாசலத்தில் பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி யார் என்று நேற்று இரவே தெரிந்தும், அந்த நபர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் 13 மணிநேரமாக கைது செய்யப்படவில்லை. விருத்தாசலம் சிறுமி பாலியல் தொல்லை விவகாரத்தில் காலம் தாழ்த்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாலியல் புகார் தொடர்பாக பேரவையில் பேசும்போது என்னுடைய பேச்சை ஒளிபரப்பவில்லை. திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. எதிர்க்கட்சித் தலைவர்களின் வலியுறுத்தலால்தான் திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றம் நடுநிலையாக செயல்படவில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேரவையில் பேசுவது நேரலை செய்யப்படாமல் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. சட்டப்பேரவையில் நான் பேச எழுந்தவுடன் நேரலையை துண்டித்துவிட்டனர். எனக்கு முன்பும், பின்பும் பேசியவர்களின் பேச்சு நேரலை செய்யப்பட்டது. எனது பேச்சு நேரலை செய்யவில்லை. முதல்வரின் பதிலை மட்டும் நேரலை ஒளிபரப்புகின்றனர். 62 உறுப்பினர்களை கொண்ட பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு துணைத்தலைவர் பதவியை அங்கீகரிக்காதது ஏன்? எதிர்க்கட்சி துணைத்தலைவர் நியமிக்கப்படுவது நீண்ட காலமாக கடைபிடிக்கப்படும் மரபு. 18 பேர் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் துணைத் தலைவர் பதவி தந்திருக்கிறார்கள்” எனக் குற்றஞ்சாட்டினார்.


