நான்காண்டு திராவிட மாடல் ஆட்சி, சுற்றுச்சூழல் துறையில் மாபெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக கூறியுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது ஆண்டு விழாவிற்காக பிரதமர் மோடி தமிழகம் வருவது பெருமைக்குரியது என தெரிவித்துள்ளார்.சுற்றுச்சூழல் காலநிலை மற்றும் வனத்துறை சார்பாக சர்வதேச சதுப்பு நிலங்கள் சூழல் அமைப்பு பாதுகாப்பு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை அடையாறு முகத்துவாரம் பகுதியில், நிதித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சதுப்பு நிலங்களில் வளரக்கூடிய மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
மேலும் அடையாறு முகத்துவாரத்தில் உள்ள சதுப்பு நில காடுகளின் அமைப்பு மற்றும் அங்கு மேற்கொள்ளவுள்ள பணிகள் குறித்தும் வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, வனத்துறையும் சுற்றுச் சூழல் துறையும் இணைந்து, தமிழ்நாட்டில் கடலோரங்களில் இருக்கக்கூடிய, 14 மாவட்டங்களிலும் இன்று மரம் நடும் பணிகளை மேற்கொண்டுள்ளன என்றார்.

இதன் வாயிலாக, கடலோர மண் அரிப்பை குறைப்பதோடு, கடலோர பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும் முடியும் என அவர் தெரிவித்தார். சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து கடலோரப் பகுதிகளை பாதுகாப்பதற்கும் ஒரு நீண்ட கால திட்டமாக இந்த திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். கங்கைகொண்ட சோழபுரம், சோழ கங்கா ஏரி புனரமைப்பு பணிகள் எப்படி உள்ளன? என்பது பற்றியும் அங்கு பிரதமர் வருகை தரவுள்ளது குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன.
அதற்கு பதிலளித்த அமைச்சர், கங்கைகொண்ட சோழபுரம் ராஜேந்திர சோழனால் உருவாக்கிய தலைநகர் என்பதை சுட்டிக்காட்டி, ஜலஸ்தம்பம், பொன்னேரி ஆகிய இடங்களில், சோழகங்கை மண்டலம் என்று கங்கைகொண்ட சோழபுரம் அழைக்கப்பட்டதை குறிப்பிட்டார். பொன்னேரி ஏரி ஏறத்தாழ 700 ஏக்கரில் இருப்பதாகவும் அந்த ஏரியிலிருந்து 1374 ஏக்கர் பரப்பளவு நிலம் பாசனம் பெறுவதையும் அமைச்சர் விளக்கினார்.இந்த ஏரியை புணரமைத்து, விவசாயிகளுக்கு பலன் தரும் வகையிலும் ஏரியை சுற்றுலா மையமாக உருவாக்குவும் 19.25 கோடி ரூபாயை முதலமைச்சர் ஒதுக்கியுள்ளதாக தங்கம் தென்னரசு கூறினார். ராஜேந்திர சோழனின் கடல் கடந்த, கடாரம் படையெடுப்பின் ஆயிரமாவது ஆண்டையொட்டி, வரும் 27-ஆம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கங்கைகொண்ட சோழபுரம் வருவது, தமிழ்நாட்டுக்கான ஒரு பெருமை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்.பிக்களுக்கு முதல்வர் வாழ்த்து…