spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதோட்டத்தில் மீட்டிங்! மறைக்கும் ராமதாஸ்! ஷாக் ரிப்போர்ட் சொன்ன ஷபீர்!

தோட்டத்தில் மீட்டிங்! மறைக்கும் ராமதாஸ்! ஷாக் ரிப்போர்ட் சொன்ன ஷபீர்!

-

- Advertisement -

ராமதாஸ் – அன்புமணி இடையிலான மோதலின் இறுதிக்கட்டம் என்பது தேர்தலுக்கு முன்னதாக அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவது தான். அது நடைபெறாமல் தடுக்க 16வது கட்டமாக சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம் என்று பத்திரிகையாளர் ஷபீர் அகமது தெரிவித்துள்ளார்.

we-r-hiring

ராமதாஸ் நடத்திய போட்டி பொதுக்குழுவில் அன்புமணி கட்சியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னணி குறித்தும், ராமதாசின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் பத்திரிகையாளர் ஷபீர் அகமது யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- ராமதாஸ் – அன்புமணி இடையே சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் பலன் அளிக்கவில்லை. ராமதாஸ் பாமகவில் அனைத்து முடிவுகளையும் நான் தான் எடுப்பேன் என்று முடிவு செய்கிறார். அதை அன்புமணி எதிர்க்கிறார். கட்சியில் வேறு யாராவது இப்படி செய்திருந்தால் உடனடியாக தூக்கி வெளியே போட்டிருப்பார்கள். ராமதாசின் மகன் என்பதால்தான் இந்த பிரச்சினை நீண்டுகொண்டே செல்கிறது. இந்த பிரச்சினையை பெரிதாக்கியது அன்புமணியின் நடவடிக்கைகள்தான். ராமதாஸ் அளிக்கும் தொலைகாட்சி பேட்டிகளுக்கு அவர் உடனுக்குடன் எதிர்வினை ஆற்றியது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியது. அதன் பிறகு ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அன்புமணி தரப்பிலும் இது குறித்து விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. கடைசியில் அன்புமணிதான் அந்த கருவியை வைத்தார் என்று நேரடியாகவே குற்றம்சாட்டினார். அப்போது, எந்த எல்லைக்கும் ராமதாஸ் செல்வார் என்பதற்கு உதாரணமாக இதுபோன்ற நிகழ்வுகள் உள்ளன.

ராமதாஸ் கூட்டிய பொதுக்குழுவில் கட்சியின் நிறுவனரான தாமே,  தலைவர் பதவியை ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார். ஒழுங்கு நடவடிக்கை குழு கட்சிக்கு எதிராக அன்புமணி செயல்பட்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளது. அடுத்தபடியாக 15 நாட்களில் உங்களை ஏன் கட்சியில் இருந்து நீக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு அன்புமணிக்கு நோட்டீஸ் அளிக்கப்படும். அவர் விளக்கம் அளிப்பாரா? அளிக்க மாட்டாரா? என்பது தெரியவில்லை. அதன் அடிப்படையில் ராமதாஸ் ஒரு முடிவை எடுப்பார். இந்த விவகாரத்தில் நீயா? நானா? என்று பார்த்துக்கொள்ளலாம் என்கிற மனநிலைக்கு ராமதாஸ் சென்றுவிட்டார். பாமக என்பது ஒரு சமுதாய இயக்கமாக உருவெடுத்தது. அந்த இயக்கத்தை ராமதாஸ் ஒரு அரசியல் கட்சியாக மாற்றினார். ராமதாசின் மகன் என்கிற அடிப்படையில் தான் அன்புமணி, கட்சியின் தலைவர் பதவிக்கு வருகிறார். வேறு யாரும் அப்படி வர முடியாது. ராமதாஸ் தான் பாமகவை மக்களுடன் இணைக்கும் சக்தியாக திகழ்கிறார். அன்புமணியிடம் அதிக எம்எல்ஏ-க்கள், மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள் என்பது ஒரு விஷயம் அல்ல. பாமகவை பொருத்தமட்டில் கட்சியின் அடையாளமாக ராமதாஸ் தான் உள்ளார்.

பாமக பொருளாளராக திலகபாமா தொடர்வார் - அன்புமணி அதிரடி!

பாமக சிறப்பு பொதுக்குழுவில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் ராமதாசுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதேவேளையில் அன்புமணி தரப்பில் அந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை அவர்கள் எப்படி சொல்ல முடியும். பாமக சட்ட விதிகளின்படி நிறுவரின் வழிகாட்டுதலின் படிதான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். இது மிகவும் வெளிப்படையானது. ஆனால் நாங்கள் நிறுவனரை அழைத்தோம். அவர் வரவில்லை. அதனால் காலி நாற்காலியை வைத்து பொதுக்குழுவை நடத்தினோம் என்கிறார்கள். அவர்களின் விளக்கத்தை யார் ஏற்றுக்கொள்வார்கள். ராமதாசிடம் உள்ள பிரச்சினை அவர் பக்கம் நிர்வாகிகள் இல்லை என்பதுதான். பாலு போன்றவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அன்புமணியிடம் சென்றுவிட்டார்கள். பாமகவில் ஏற்பட்டுள்ள பிளவு அரசியல் ரீதியாக நிச்சயமாக பாதிப்பை ஏற்படுத்தும். அவர்களின் பேரம் பேசும் வலிமை குறைந்துவிடும். 2024 மக்களவை தேர்தலில் அதிமுக செல்வது என்று முடிவு எடுத்த நிலையில், பின்னர் அன்புமணி வற்புறுத்தல் காரணமாக பாஜக கூட்டணிக்கு சென்றதாக கூறினார். எனவே ராமதாசை புறக்கணித்துவிட்டு அன்புமணி எதை செய்தாலும், அது அவருக்கு மிகப்பெரிய பின்னடைவை தான் ஏற்படுத்தும்.

இந்த பிரச்சினைகளை தேர்தலுக்கு முன்னதாக முடித்து வைத்திடலாம் என்று முயற்சி செய்தார்கள். ஆனால் அந்த முயற்சிகள் எல்லாம் தோல்வி அடைந்தது. ராமதாஸ் கேட்பது ஒன்றுதான். கட்சிக்கு நான் தலைவர். தேர்தல் கூட்டணிகளை நான் தான் முடிவு செய்வேன். தனக்கு பிறகு அன்புமணி பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்கிறார். ஆனால் அன்புமணி ராமதாஸ் அதை விட்டுக்கொடுக்க மறுக்கிறார். அன்புமணி கட்சியின் தலைமை பதவிக்கு தகுதியான நபர் இல்லை என்று சொல்லிவிட்டு, பொதுக்குழுவில் தன்னுடைய மகள் காந்திமதியை அருகில் அமர வைக்கிறார். இதன் மூலம் தன்னுடைய அரசியல் வாரிசாக அவரை முன்னிருத்துகிறேன் என்பது தான் அர்த்தமாகும்.  இது அன்புமணிக்கான மெசேஜ் தான். இந்த பிரச்சினைக்கு தீர்வு என்பது என்னை பொருத்தவரை அன்புமணி இறங்கி வருவதுதான். ஆனால் அவர் அந்த இடத்தில் இல்லை. மற்றொருபுறம் இது குடும்பத்திற்குள் நடைபெறும் பிரச்சினை என்பதை கடந்து இருவருக்குமான தன்மான பிரச்சினையாக மாறிவிட்டது. வீட்டிற்குள் நடைபெற்ற சில விஷயங்களை ராமதாஸ் வெளியே சொல்லவில்லை. அந்த விஷயங்கள் எல்லாம் வெளியே வந்தால் அன்புமணிக்கு இன்னும் பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தும்.

அன்புமணியை, பாமகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து திடீரென நீக்கிவிட முடியாது. அதற்காக தான ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அன்புமணி கட்சியின் கட்டுப்பாட்டை மீறியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது. அடுத்து விளக்கம் கேட்டு அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்புவார்கள். இதுவரை அன்புமணி ஆதரவாளர்களை பொறுப்புகளில் இருந்துதான் நீக்கிக் கொண்டிருந்தார். யாரையும் கட்சியில் இருந்து நீக்கவில்லை. இனி அவர்களை கட்சியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அன்புமணி தரப்பில், பாமகவில் நிறுவனருக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் பாமவின் விதி மிகவும் தெளிவாக உள்ளது. பாமக நிறுவரின் வழிகாட்டுதலின் படி பொதுக்குழு கூட்டப்பட வேண்டும். அவருடைய வழிகாட்டுதலின் படி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.  சட்டப்படி மோதிப்பார்க்க ராமதாசும் தயாராக இருக்கிறார்.

இந்த மோதலின் இறுதிக்கட்டம் என்பது தேர்தலுக்கு முன்னதாக பாமகவில் இருந்து அன்புமணி நீக்கப்படுவதாகும். இந்த விவகாரம் அந்த எல்லைக்கு போக கூடாது என்பதற்காக 16வது முறையாக யாராவது பஞ்சாயத்து பேச வருவார்கள். வரும் 25ஆம் தேதி அமித்ஷா தமிழகம் வரும் நிலையில்,இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும் வாய்ப்பு உள்ளது. பாஜகவுக்கும் இது நன்றாக தெரிகிறது.  நாளை அன்புமணியுடன் தனியாக பாஜக கூட்டணி அவைத்தாலும், தேர்தல் நெருங்கும்போது ராமதாஸ் என்ன குற்றச்சாட்டை முன்வைப்பார் என்று தெரியாது. தமிழ்நாட்டில் அதிமுக விவகாரத்தில் தலையிட்டதே பாஜவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில், தேர்தல் நெருங்கும் நேரத்தில் 16வது முறையாக சமாதான முயற்சியில் இறங்கலாம். அந்த முயற்சியில் வெற்றியோ, தோல்வியோ பெறலாம். அல்லது ராமதாஸ் நினைத்தவற்றை சாதிக்கலாம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ