தீபாவளி ரிலீஸ் என்றாலே அதை ஒரு திருவிழாவாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அந்த நாளில் புது புது படங்களை பார்க்க திரையரங்குளில் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய உடனே தீபாவளி பண்டிகையின் உணர்வு ஆரம்பமாகிவிடும். பிடித்த ஹீரோக்களின் படங்கள் தீபாவளிக்கு வந்தால், தீபாவளியை தியேட்டரிலேயே அனுபவித்து விடுவார்கள் ரசிகர்கள். எனவே தீபாவளிக்கு என்ன படம் ரிலீஸ் ஆகிறது என்பதுதான் ரசிகர்களின் முதல் கேள்வியாக இருக்கும். இந்நிலையில் இந்த தீபாவளிக்கு ஏற்கனவே ‘பைசன்’, ‘எல்ஐகே’ ஆகிய திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கிறது. இது தவிர பிரதீப் ரங்கநாதனின் மற்றொரு படமான ‘டியூட்’ படமும் தீபாவளிக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஒரு புதிய வரவாக தீபாவளி ரேஸில் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்‘ திரைப்படமும் இணைய இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் டீசல். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்திருக்கிறார். சண்முக முத்துசாமி இந்த படத்தை இயக்க திபு நினன் தாமஸ் இதற்கு இசை அமைத்திருக்கிறார். தர்ட் ஐ என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், எஸ் பி சினிமாஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறது. கடந்த பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த படத்தை இந்த தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.