தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
கடந்தாண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான ‘அமரன்’ திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்று தந்தது. இதைத் தொடர்ந்து வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் ‘மதராஸி’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. அதே சமயம் நேற்று (ஆகஸ்ட் 24) சென்னையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. அந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், ‘கோட்’ படத்தில் விஜயுடன் தான் நடித்த காட்சி குறித்து பேசியுள்ளார்.
அதன்படி அவர், “விஜய் சாரோட அந்த துப்பாக்கி சீன் நடிச்சதுக்கு அப்புறம் நிறைய பேர் சந்தோஷமா எடுத்துக்கிட்டாங்க. நானும் விஜய் சார் என்னை மோட்டிவேட் செய்ததாக எடுத்துக்கொண்டேன். ஆனால் ஒரு சிலர் இவர் அடுத்த தளபதியாக நினைக்கிறார். குட்டி தளபதி, திடீர் தளபதி என்றெல்லாம் சொல்றாங்க. நான் அப்படி நினைக்கின்ற ஆளாக இருந்திருந்தா அவரும் எனக்கு துப்பாக்கிய கொடுத்திருக்க மாட்டார். நானும் வாங்கி இருக்க மாட்டேன்.
அண்ணன் அண்ணன் தான்.. தம்பி தம்பி தான்.. விஜய் சாரோட ரசிகர்களை பிடிக்கப் பார்க்கிறார் என்று நிறைய பேர் சொல்றாங்க. யாரோட ரசிகர்களையும் இழுக்க முடியாது. ரசிகர்கள் என்றால் ஒரு பவர். ரஜினி சார், கமல் சார், விஜய் சார், அஜித் சார், சூர்யா சார், விக்ரம் சார், சிம்பு சார், தனுஷ் சார் ஆகியோர் பல வருடங்களாக கஷ்டப்பட்டு ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கிறார்கள். அதுபோல நான் இன்னும் என் ரசிகர்களை சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


