இயக்குனர் வெற்றிமாறன், சிம்பு நடிக்கும் புதிய படத்தின் கதை குறித்து பேசி உள்ளார்.
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் கடைசியாக விடுதலை இரண்டாம் பாகத்தை இயற்றியிருந்தார். இதற்கிடையில் இவர், வாடிவாசல், வடசென்னை 2 ஆகிய படங்களையும் இயக்க திட்டமிட்டுள்ளார். ஆனால் அதற்கு முன்பாக சிம்புவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார் என சமீபகாலமாக பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

அதாவது நடிகர் சிம்பு, தக் லைஃப் படத்திற்கு பின்னர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தன்னுடைய 49 ஆவது திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என அறிவிப்பு வெளியானது. ஆனால் ஒரு சில காரணங்களால் சிம்பு, வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த கூட்டணியின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் வெற்றிமாறன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் இந்த படத்தின் கதையை பற்றி கூறியுள்ளார். “நான் முதலில் வடசென்னை படத்தை சிம்புவை வைத்து இயக்கத் திட்டமிட்டேன். பின்னர் தனுஷுடன் அதை பண்ணும்போது ஒரிஜினல் கதையிலிருந்து சில விஷயங்கள் சேர்க்கப்படவில்லை. இப்போது சிம்புவுடன், நான் வடசென்னைக்காக எழுதிய ஒரிஜினல் கதையை மீண்டும் கொண்டு வர இருக்கிறேன். இந்த கதை அதே கால வரிசையில் அதே கேரக்டர்களுடன் நடக்கும். ஆனால் தனுஷ் இதில் இருக்க மாட்டார்” என்று தெரிவித்துள்ளார்.