சூர்யா நடிக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது என தகவல் கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவரான சூர்யா தற்போது ‘கருப்பு’ எனும் திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார். இது தவிர வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனது 46வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் வெற்றிமாறன் இயக்க உள்ள ‘வாடிவாசல்’ திரைப்படத்திலும் கமிட்டாகி இருக்கிறார் சூர்யா. இந்நிலையில் தான் கடந்த சில தினங்களாக நடிகர் சூர்யா தனது 47வது படத்தை ‘ஆவேஷம்’ படத்தின் இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. அதாவது இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், சுசின் ஷியாம் இப்படத்திற்கு இசையமைக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. அடுத்தது தற்காலிகமாக சூர்யா 47 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகர் சூர்யா, போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. மேலும் இப்படத்தில் நடிகை நஸ்ரியா கதாநாயகியாக நடிக்க போகிறார் என்றும் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. இவ்வாறு இப்படம் தொடர்பான அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிவிடுகின்றன. இந்நிலையில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.