முதலமைச்சர் பாதுகாப்பு வாகனத்தில் மேயர் தொங்கி கொண்டு சென்றது குறித்து அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.

மாண்டஸ் புயலினால் பாதிக்கப்பட்ட காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சேதமடைந்த மீனவர்களின் விசைப்படகுகளை கடந்த சனிக்கிழமை காலை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கே.என் நேரு, சேகர்பாபு மேயர் ப்ரியா, துணை மேயர் மகேஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர் ஜே ஜே எபிநேசர், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முதலமைச்சர் கான்வாய் வாகனம் முன்பு பாதுகாப்பு போலீசாரின் காரில் தொங்குவது போல சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் தொங்கியவாறு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் கான்வாய் வாகனத்தில் மேயர் பிரியா தொங்கியபடி சென்றது அதிகார துஷ்பிரயோகம் அல்ல, அவரது துணிச்சல். சென்னை மேயர் பிரியா ஆணுக்கு நிகராக துணிச்சலாக பேரிடர் காலத்தில் பணி செய்வதை பாராட்ட வேண்டும். இதில் பெரிதுபடுவதற்கு ஒன்று இல்லை. கோவிலுக்குச் சேரவேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளை மீட்டுள்ளோம். 48 கோவில்களில் செல்போனுக்கு தடை விரைவில் அமல்படுத்தப்படும். இந்து சமய அறநிலையத்துறையில் போலி நியமனம் குறித்து தகுந்த ஆதாரம் கொடுத்தால், நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.


