செல்வப்பெருந்தகை தனது ‘X’ தளத்தில் குறிப்பிடுவது போல் எந்ந நடவடிக்கையும் மேற்கொள்ளபடவில்லை என வருமான வரித்துறை விளக்கமளித்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான செல்வப்பெருந்தகை முன்வைத்த குற்றச்சாட்டுகளை வருமான வரித் துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. அவர் கூறியவை அனைத்தும் அடிப்படையற்றதும் உண்மைக்குப் புறம்பானவையும் என வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி, செல்வப்பெருந்தகை தனது X தளத்தில் வெளியிட்ட பதிவில், வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் தன்னை சட்டவிரோதமாகக் கட்டுப்படுத்தி, தேர்தல் பணிகளை மேற்கொள்ள விடாமல் தடுத்ததாக குற்றம்சாட்டியிருந்தார். இதே குற்றச்சாட்டை அவர் ஊடகங்களிடமும் தெரிவித்திருந்தார். மேலும், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டதாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த வருமான வரித் துறை, ஏப்ரல் 20ஆம் தேதி அல்லது அதற்கு அருகாமையிலான நாட்களில் செல்வப்பெருந்தகைக்கு எதிராக எந்தவிதமான சோதனையோ, ஆய்வோ மேற்கொள்ளப்படவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. அவரது நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையிலான எந்த நடவடிக்கையிலும் துறை ஈடுபடவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், அவரது இல்லம் அல்லது அவருடன் தொடர்புடைய இடங்களில் எந்தச் சோதனையும் நடத்தப்படவில்லை எனவும் துறை விளக்கம் அளித்துள்ளது. அதே நேரத்தில், கணக்கில் காட்டப்படாத பணம் கொண்டு செல்லப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் சில பகுதிகளில் வழக்கமான சரிபார்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவை செல்வப்பெருந்தகையுடன் எந்த தொடர்பும் இல்லாதவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சரிபார்ப்புகளில் எந்தவித முறைகேடும் கண்டறியப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
தவறான தகவல்களை பரப்பி அரசுத் துறையின் மீது அவதூறு சுமத்தியதாகக் குற்றம்சாட்டி, செல்வப்பெருந்தகைக்கு எதிராக வருமான வரித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இவ்விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதுடன், சென்னை மாநகர காவல் ஆணையரிடமும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க கோரப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் பரப்பப்படும் இத்தகைய தகவல்களை வருமான வரித் துறை கடுமையாகக் கண்டித்துள்ளது.
”மாம்பழம் சின்னத்திற்குள் துரோகம் எனும் விஷம் ஏறிவிட்டது” – ராமதாஸ் விமர்சனம்
