பாமகவில் ராமதாஸ் – அன்புமணி இடையிலான மோதல் கட்சி பிரச்சினை என்பதை தாண்டி சமூகத்துடைய பிரச்சினையாக மாறிவிட்டதாகவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி வலியுறுத்தியுள்ளார்.


மருத்துவர் ராமதாஸ் – அன்புமணி இடையிலான மோதலின் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் மணி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பாமகவில் செங்குத்தான பிளவு ஏற்பட்டுள்ளது. வன்னியர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போடுவது தொடர்பாக அன்புமணி, ராமதாஸ் தரப்புக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது. முதலில் தந்தை – மகன் பிரச்சினை கட்சி பிரச்சினையாகியது. தற்போது கட்சி பிரச்சினை நடுத்தெருவுக்கு வந்து சமூகத்தினுடைய பிரச்சினையாகி உள்ளது. இனி சட்டம் தன்னுடைய கடமை செய்யும். திண்டிவனம் வன்னியர் சங்க கட்டிடத்தை யார் கட்டுப்படுத்துவது என்கிற விவகாரத்தில் அடிதடி நடைபெற்றுள்ளது. ராமதாஸ் ஆட்கள் பூட்டு போட்டு போய்விட்டார்கள்.
இது வெறும் அரசியல் பிரச்சினை, வாய்மொழியான கருத்து பறிமாற்றங்கள் என்பதை தாண்டி, அடிதடியாக வந்து நிற்கிறது. நேற்றே ராமதாஸ் தைலாபுரம் வீட்டிற்கு அதிரடிப்படை சென்றுள்ளது. அதேபோல் அன்புமணிக்கும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். இந்த மோதல் காரணமாக ராமதாஸ் – அன்புமணி என இருதரப்புக்கும் நஷ்டம்தான். வன்னியர்களின் வாக்கு வங்கி சிதறுகிறது. 2026ல் இவர்கள் பிரிந்து வெவ்வேறு அணிகளுக்கு செல்வார்கள். அப்போது அவர்களுக்கு பெரிய அளவிலான இடங்கள் கிடைக்காது.

திமுக, அதிமுக போன்ற கட்சிகள் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக பணத்தை சம்பாதிக்கும் கட்சிகளாகும். பாமக, தேமுதிக போன்ற கட்சிகளுக்கு தங்களிடம் உள்ள பணத்தை காப்பாற்றிக் கொள்வதற்கு அரசியல் தேவையாகும். அதனுடைய விளைவுதான் மாறி மாறி அப்பாவும், பிள்ளையும் பாஜகவிடமும், அதிமுகவிடமும் சரணடைவது. ராமதாஸ் பாஜகவையும், விமர்சிக்காத வார்த்தைகள் இல்லை. ஆனால் இன்றைக்கு ராமதாஸ், மோடிக்கு சர்ட்டிபிகேட் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஒன்றுபட்ட பாமக இருந்தது என்றால் அவர்களின் பேர வலிமை அதிகமாகும். ஆனால் இன்றைக்கு அவர்கள் இரண்டாக உடைந்து நிற்பதால், அவர்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்காது. அப்படி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்னுடைய தலைமைதான் இருக்க வேண்டும் என்று ராமதாஸ் வந்துவிட்டார். அன்புமணியோ, தான் யாருக்கும் தர மாட்டேன் என்று சொல்லிவிட்டார். வளங்களை பிரித்துக் கொள்வதில் சண்டை.

ராமதாசை ஒரு சாதிய தலைவராக நான் பார்க்கவில்லை. அவரை ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக தான் பார்க்கிறேன். அவரால் அந்த சமூகத்திற்கு 40 ஆண்டு காலத்தில் எவ்வளவோ நன்மைகள் விளைந்தது உண்மைதான். ஆனால் இன்றைக்கு நடப்பது அவர் செய்த அத்தனை நன்மைகளையும் மறக்க செய்கிறது. வரலாற்றில் இதுதான் நிற்கிறது. அது நிற்காது. இது 87 வயதான ராமதாசுக்கும் புரியவில்லை. இன்னும் கால் நூற்றாண்டு அரசியலை கையில் வைத்திருக்கும் அன்புமணிக்கு புரியவில்லை என்றால் நாம் சொல்வதற்கு என்ன இருக்கிறது. அதுவும் மருத்துவர் ராமதாசுக்கு எதிராக அவரது பிம்பத்தை சிதைக்கின்ற செயல்களில் தொடர்ச்சியாகக ஈடுபட்டு வருகிறார்கள்.
அப்படி எனில் இவர்கள் எல்லாம் இனி எதற்காக பொதுவாழ்வில் இருக்க வேண்டும். எதற்காக பாமக என்ற ஒன்று இருக்க வேண்டும். கட்சியை இழுத்து மூடிவிட்டு போங்க. இனி நீங்கள் இருப்பதற்கான அனைத்து காரணங்களும் மறித்து போய்விட்டன. வன்னியர்களின் நலனுக்காக பாடுபடக்கூடிய புதியவர்கள் வரட்டும். இனி ராமதாஸ், அன்புமணியால் வன்னியர் சமுதாய மக்களுளக்கு எந்த பயனும் இல்லை.

ராமதாஸ் – அன்புமணி இடையிலான மோதல் காரணமாக பாமகவின் கணிசமான இளைஞர் வாக்குகள் விஜய்க்கு போய்விடும். எஞ்சி இருப்பதில் ஒரு சதவீதம் பாஜகவுக்கு சென்றுவிடும். ராமதாஸ் தலித் அமைப்புகளுக்கு எதிராக சாதிய கூட்டமைப்பை ஏற்படுத்தியதன் மூலமாக ராமதாஸ் அவர்களை பாஜகவை நோக்கி நகர்த்திவிட்டார். மற்றொரு பிரிவு திமுக, அதிமுகவை நோக்கி நகர்ந்துவிடும். ராமதாஸ் – அன்புமணி மோதல் எல்லைகளை கடந்து அபாயகரமான கட்டத்திற்கு போய்விட்டது. இருதரப்பும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இருவருக்கும் இடையே இருக்கும் பகை உணர்வு மிகவும் அபாயகரமாக உள்ளது. இரு தரப்பிலும் எந்த உச்சத்திற்கும் செல்வார்கள் என்று தோன்றுகிறது. அதன் காரணமாக அதிவிரைவுப் படைகளை அனுப்பியுள்ளனர். ராமதாஸ், அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கியதன் மூலம் முதல் ரவுண்டில் வெற்றி பெற்றிருக்கிறார். அன்புமணி இதுவரை இதற்கு எதிர்வினை ஆற்றவில்லை. ஆனால் அன்புமணி பொதுக்குழுவை கூட்டி ராமதாசை நீக்கப் போகிறார் என தகவல் வெளியாகின.

ராமதாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பல ஆயிரம் கோடி மதிப்பிலான வன்னியர் சங்க அறக்கட்டளை யார் கட்டுப்பாட்டிற்கு போக போகிறது என்பது தான் பிரச்சினை. ராமதாஸ், தன்னுடைய மகளை கொண்டு வருகிறார். எப்படியாக இருந்தாலும் அவர்கள் குடும்பத்திற்கு உள்ளேதான் சொத்துக்கள் போகப் போகிறது. பாமகவில் அன்புமணி நீக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் ஆணையம் தங்கள் தரப்பை உண்மையான பாமக என்று அங்கீகரித்து உள்ளதாக அன்புமணி கூறியுள்ளார். தற்போதைய தேர்தல் ஆணையம் என்பது பாஜகவின் ஒரு பிரிவு அலுவலகமாகும். அமித்ஷா சொல்வதை தேர்தல் ஆணையர் கேட்க போகிறார்.
இன்றைய சூழலில் கட்சி அன்புமணியின் கையில் உள்ளது. ஆனால் வன்னியர் சங்கத்தில் உள்ள மூத்த நிர்வாகிகள் ராமதாஸ் பின்னால் உள்ளனர். பாமகவுக்கு 3 சதவீத வாக்குகள் உள்ளது என்றால் அது விஜய், பாஜக போன்றவர்களுக்கு 60 சதவீதம் கரைந்து விட்டது. வாக்கு சதவீதம் குறைந்தபோன நிலையில் திமுக, அதிமுக கூட்டணியில் பெரிய அளவு மதிப்பு இருக்காது. ராமதாஸ், திமுக உடனும், அன்புமணி அதிமுக உடனும் கூட்டணிக்கு செல்லப் போகிறார்கள். அல்லது ராமதாசை 5வது அணியாக இறக்கி, அன்புமணி போட்டியிடும் தொகுதிகளில் எல்லாம் எதிராக போட்டியிட்டால் வாக்குகள் உடையும்.

என்னை பொருத்தவரை பாமக வாக்கு வங்கி இருவருக்கும் கிடையாது. பாமகவின் வாக்கு வங்கி என்பது சிதைந்து கொண்டிருக்கிறது. விஜய் பேக்டர் என்கிற விஷயம் உள்ளபோது இப்படி செய்யலாமா? என்கிற யோசனையாவது இருக்க வேண்டும். விஜய் பேக்டரை கண்டு திமுக, அதிமுக என இருவரும் நடுங்கி கொண்டிருக்கிறார்கள். நீங்கள் சுதாரித்துக்கொண்டு வேற்றுமைகளை மறக்க வேண்டிய நேரத்தில், இருவரும் அடித்துக்கொண்டு நடுத்தெருவுக்கு வந்துள்ளீர்கள். விஜய் என்கிற புதிய சக்தி உங்களுடைய வாக்கு வங்கியை சாப்பிட தொடங்கியுள்ளார். இதை புரிந்துகொண்டுதான் திமுக, அதிமுக போன்றவர்கள் சுற்றுபயணம் மேற்கொள்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு பணம் தான் பிரச்சினை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


