இந்திய விமானப் படையில் 1963 முதல் சேவையில் இருந்து வந்த மிக்-21 போர் விமானங்கள் இன்று உத்தியோகபூர்வமாக ஓய்வு பெறுகின்றன. ஆறு தசாப்தங்களாக நாட்டின் பாதுகாப்பில் முதுகெலும்பாக விளங்கிய இந்த விமானத்திற்கு சண்டிகரில் பிரியாவிடை அளிக்கப்பட்டது.மிக்-21 போர் விமானங்கள், 1963ஆம் ஆண்டு இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டன. அதன் பின்னர் 1,200க்கும் மேற்பட்ட விமானங்கள் நாட்டின் பாதுகாப்பில் பங்காற்றின. பாகிஸ்தானுடன் நடைபெற்ற நான்கு போர்களிலும் வீரத்துடன் செயல்பட்டது. தாக்குதல், பாதுகாப்பு, உளவு என அனைத்துப் பணிகளிலும் திறம்பட பங்காற்றிய மிக்-21, பல தலைமுறை விமானிகளுக்கு பயிற்சியளித்தும் வந்தது.
இன்று மதியம் 12.05 மணிக்கு, ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் (‘Badal 3’ என்ற அடையாளத்துடன்) ஆறு Bison வகை விமானங்களுடன் கடைசி முறையாக பறந்தார். அவருடன் இந்தியாவின் ஏழாவது பெண் போர் விமானி ஸ்குவாட்ரன் லீடர் பிரியா சர்மாவும் பங்கேற்றார். விமானம் தரையிறங்கியதும், தண்ணீர் பீரங்கி மூலம் மரியாதை செலுத்தப்பட்டது.

மிக்-21 விமானம் சோவியத் காலத்தைச் சேர்ந்ததானாலும், இந்திய விமானப் படையின் அடையாளமாக மாறியது. 2006 வரை இந்திய விமானப் படை ‘MiG Air Force’ என அழைக்கப்பட்டதற்குக் காரணம், மிக்-21 உட்பட ஐந்து வகை MiG விமானங்கள் ஒரே நேரத்தில் பயன்பாட்டில் இருந்ததுதான். Mach 2 அதிவேகத்துடன் பறந்த இந்த விமானம், புதிய சவால்களுக்கு ஏற்ப அவ்வப்போது மேம்படுத்தப்பட்டது. ரஷ்யாவே நினைத்துப் பார்க்க முடியாத பல விஷயங்களை இந்திய விமானப் படை சாதித்தது.
இந்த விமானம் செய்ய முடியாதது எதுவுமில்லை. இந்த விமானம் போர், தரைத் தாக்குதல், உளவு, பயிற்சி என அனைத்தையும் செய்தது. நவீன ஆயுதங்களும், மின்னணு கருவிகளும் பொருத்தப்பட்டதால், இது ஒரு போர் விமானமாக மட்டுமல்லாமல், இந்திய-ரஷ்ய இராணுவ உறவின் அடையாளமாகவும் மாறியது. இந்த உறவு பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. அதேசமயம், அடிக்கடி விபத்துக்குள்ளானதால் ‘பறக்கும் சவப்பெட்டி’ என்ற மோசமான பெயரையும் பெற்றது.
2023 மே மாதம், சூரத்கர் விமானப்படை தளத்தில் இருந்து மிக்-21 விமானம் வழக்கமான பயிற்சிக்கு புறப்பட்டது. ஆனால், ராஜஸ்தானின் ஹனுமன்கர் அருகே உள்ள பஹ்லோல் நகர் அருகே ‘தொழில்நுட்ப கோளாறு’ காரணமாக விபத்துக்குள்ளானது. ராஜஸ்தானில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த விபத்துக்குப் பிறகு,அனைத்து மிக்-21 விமானங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இருந்தாலும், விமானத்தின் சாதனைகள் அந்த குற்றப்பெயரை விட மிகப்பெரிது என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பல உயர் அதிகாரிகள் பிரியாவிடை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 1963ஆம் ஆண்டு முதல் சேவையில் இருந்து வந்த மிக்-21 விமானங்களுக்கு அளிக்கப்பட்ட பிரியாவிடை, இந்திய விமானப் படையின் வரலாற்றில் மறக்க முடியாத நாளாகப் போற்றப்படுகிறது.
‘மதராஸி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்…. வீடியோ மூலம் அறிவித்த சிவகார்த்திகேயன்!