நடிகை அனுபமா பரமேஸ்வரன், பரியேறும் பெருமாள் படத்தை மிஸ் பண்ணது தனக்கு வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார்.மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில் அக்டோபர் 17ஆம் தேதி திரைக்கு வரவுள்ள பைசன் திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி, சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இப்படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித், இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் துருவ் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.
அப்போது நடிகை அனுபமா பரமேஸ்வரன் பேசுகையில், “முதலில் சில வருடங்களுக்கு முன்பு பா. ரஞ்சித் தரப்பிலிருந்து ‘பரியேறும் பெருமாள்’ படத்திற்காக எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் கால்சீட் பிரச்சினை காரணமாக என்னால் அந்த படத்தை பண்ண முடியாமல் போனது அதற்காக மிகவும் வருத்தப்பட்டேன். பரியேறும் பெருமாள் படத்தைப் பார்த்த பிறகு நான் மிகப்பெரிய மாரி செல்வராஜ் சாரின் ரசிகராக மாறிவிட்டேன். எனது தந்தை மாரி செல்வராஜ் சாரின் மிகத் தீவிர ரசிகர். பரியேறும் பெருமாள் படத்தையே 13 தடவைக்கு மேல் பார்த்திருப்பார். அதன் பிறகு அவருடைய ஒவ்வொரு படத்தின் அப்டேட் எப்பொழுது வரும் என்று காத்துக்கொண்டே இருப்பேன். பிரேமம் படம் சமயத்தில் நடந்த ஒரு அற்புதம் எனக்கு பைசன் படத்தில் நடந்தது. இயக்குனர் மாரி செல்வராஜ் நடிப்பு மற்றும் சினிமாவை பற்றி வேறு ஒரு பரிமாணத்தை எனக்கு காண்பித்தார். பைசனுக்கு முன் இருந்த அனுபமா வேற, பைசனுக்கு பின் இருக்கும் அனுபமா வேற” என்றார்.

நடிகை ரெஜிஷா விஜயன் பேசுகையில், “கர்ணன் படத்திற்கு பிறகு இயக்குனர் மாரி செல்வராஜ் உடைய அடுத்த படங்களிலும் எனக்கு வாய்ப்பு கேட்டேன் ஆனால் உனக்கான கதை எழுதவில்லை என்று கூறிவிட்டார். கர்ணன் படத்தில் நீச்சல் கத்துக்கொண்டேன் ஆனால் 4 வருடங்கள் ஆனதால் அது மறந்து விட்டது. கொஞ்சமாக இருந்த போதிலும் பைசன் படத்தில் நீச்சல் காட்சி இருந்தது, நீச்சல் மறந்ததால் நான் தண்ணீருக்குள்ளே சென்று விட்டேன். ஒரு நிமிடம் நான் இறந்துவிட்டேனோ என்று நினைத்தேன். அதன் பிறகு வெளியே வந்து பார்க்கும் பொழுது இயக்குனர் மாரி செல்வராஜ் கூலிங் கிளாஸ் மற்றும் ஷூவுடன் தண்ணீருக்குள் குதித்தார். நான் ஒரு 30 படங்கள் பண்ணி விட்டேன். ஆனால் ரொம்ப பிடித்த இயக்குனர் மாரி செல்வராஜ். நடிகை அனுபமா பரமேஸ்வரன் தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகை. தமிழ், தெலுங்கு, மலையாளத்திலும் படம் பண்ணிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஹீரோயின் அவர்தான் இருந்தாலும் எல்லா ப்ரோமோஷனிலும் என்னையும் அமர வைத்தார். அனுபமாவிற்கு எந்த ஒரு ஈகோவும் இல்லை. படத்தில் நாங்கள் நல்ல நண்பர்கள், நிஜத்திலும் நாங்கள் நல்ல நண்பர்கள் ஆகி விட்டோம். துருவ் விக்ரம் இந்த படத்தில் கடின உழைப்பை போட்டு இருக்கிறார் . இந்த படம் வெளியான பிறகு தமிழ் சினிமாவிற்கு நல்ல நடிக்கக்கூடிய ஒரு சூப்பர் ஸ்டார் கிடைத்து விடுவார்” என பேசினார்.