இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படம் குறித்து பேசி உள்ளார்.
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் தற்போது நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாக உள்ள ‘ஆர்யன்’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இதற்கிடையில் மெண்டல் மனதில், 7ஜி ரெயின்போ காலனி 2 ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இது தவிர புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய படங்களையும் இயக்கத் திட்டமிட்டுள்ளார். அதன்படி புதுப்பேட்டை 2 படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் போய்க்கொண்டிருப்பதாகவும் சமீபத்தில் அப்டேட் கொடுத்திருந்தார் செல்வராகவன். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில், ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் இப்போது கொண்டாடப்படுவதில் தனக்கு மகிழ்ச்சி இல்லை என்று கூறியிருக்கிறார்.

அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் ஆகியோரின் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளியானது. இந்த படமானது கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் தொடர்புப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டிருந்தது. கடந்த காலத்தில் சோழர்கள் மற்றும் பாண்டியர்களுக்கு இடையிலான பகையை காட்டும் விதத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் செல்வராகவனின் படைப்பில் மிகவும் வித்தியாசமானதாகவும், உணர்வுபூர்வமானதாகவும் இருந்தது. ஆனால் இந்த படம் திரைக்கு வந்த போது எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. ரசிகர்கள் இந்த படத்தை புரிந்து கொள்ளாமல் விமர்சித்து வந்தார்கள். ஆனால் தற்போது இந்த படத்தை கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல் இதன் அடுத்த பாகத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில்தான் செல்வராகவன், “ஆயிரத்தில் ஒருவன் படத்தைப் பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்த போது எனக்கு வருத்தமாக இருந்தது. இன்று அந்த படத்தை கொண்டாடுகிறார்கள். காலங்கள் கடந்து இப்போது அந்த படத்தை கொண்டாடுவதில் என்ன பயன்? நிறைய பணமும், நேரமும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ரிலீஸின் போது திரையரங்குகளில் அந்த படத்தை கொண்டாடி இருக்க வேண்டும். இப்போது அந்த படத்தை கொண்டாடுவதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை” என்று தெரிவித்துள்ளார்.


