இளையராஜா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனித்துவமான இசையின் மூலம் ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் இளையராஜா. இவரை ரசிகர்கள் பலரும் இசைஞானி என்று கொண்டாடி வருகின்றனர். அதேபோல் இவருடைய வாரிசுகளும் ரசிகர்களின் ஃபேவரைட் தான். அந்த வகையில் இவருடைய செல்ல மகள் பவதாரிணி தனது மென்மையான குரலினால் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்தவர். இருப்பினும் இளம் வயதிலேயே உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட பவதாரிணி, கடந்த ஆண்டில் உயிரிழந்தார். இவருடைய இழப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனாலும் அவரை நினைவுபடுத்தும் விதமாக, இயக்குனர் வெங்கட் பிரபு தனது ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படத்தில் அவருடைய குரலை AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திரும்பக் கொண்டு வந்திருந்தார். அதே சமயம் இசைஞானி இளையராஜாவும் தனது மகளின் மறைவிற்கு பிறகு நடந்த நினைவேந்தல் கூட்டத்தில் மகள் பவதாரிணியின் நினைவாக ‘ஆர்கெஸ்ட்ரா’ ஒன்றை உருவாக்க திட்டமிட்டிருப்பதாக கூறியிருந்தார்.
அதன்படி தற்போது தனது எக்ஸ் தள பக்கத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இளையராஜா. அந்த அறிவிப்பில், “என்னுடைய மகள் பவதாரிணியின் நினைவாக, ‘பவதா மகளிர் ஆர்கெஸ்ட்ரா’ என்ற பெயரில் பெண்களுக்கான இசைக்குழுவை தொடங்கி இருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். திறமையான பெண் பாடகர்கள், இசைக் கலைஞர்கள் ஆகியோருக்கு இது ஒரு அரிய வாய்ப்பு. உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான மேடை இது. விருப்பம் உள்ளவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். allgirlsorchestra@gmail.com என்கிற மின்னஞ்சலுக்கு தங்களின் விவரங்களை அனுப்பலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.


