spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிர்ச்சியளிக்கும் ஹரியானா வாக்குத் திருட்டு.. மௌனம் காக்கும் தேர்தல் ஆணையம் - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

அதிர்ச்சியளிக்கும் ஹரியானா வாக்குத் திருட்டு.. மௌனம் காக்கும் தேர்தல் ஆணையம் – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

-

- Advertisement -

ஹரியானா ஃபைல்ஸ்

ஹரியனா சட்டப்பேரவை தேர்தலில் நடந்த வாக்கு திருட்டு அதிர்ச்சியளிப்பதாகவும், மக்களின் தீர்ப்பை பாஜக திருடுவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். முதலாவதாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியில் தேர்தலில் பதிவான வாக்குகள் ஆன்லைன் மூலம் நீக்கப்பட்டு, பல்வேறு புதிய வாக்குகள் சேர்க்கப்பட்டதாக பகீர் கிளப்பியிருந்தார். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்பின்னர் மகாராஷ்டிரா மற்றும் பீகார் மாநிலங்களில் வாக்கு திருட்டு நடைபெற்றதற்கான ஆதாரங்களை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக இன்று ஹரியானா மாநிலத்தில் போலி வாக்குகள் மூலம் ஒரு மாநிலமே திருடப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ‘ஹெச் ஃபைல்ஸ்’ என்னும் தலைப்புல் ஆதாரங்களை வெளியிட்டுள்ள அவர், பிரேசிலைச் சேர்ந்த மாடல் அழகி ஒவரின் புகைப்படத்துடன், பல்வேறு பெயர்களில் போலி வாக்காளர் அடையாள அட்டை பயன்படுத்தி 22 வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், இது தனிப்பட்ட தொகுதிகளில் மட்டுமின்றி மாநில அளவிலும், தேசிய அளவிலும் இதே போன்று நடந்துவருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “ஹரியானா ஃபைல்ஸ்: மக்களின் தீர்ப்பை பாஜக திருடுகிறது. பாஜகவின் சமீபத்திய தேர்தல் வெற்றிகளின் நம்பகத்தன்மை குறித்து மீண்டும் ஒருமுறை, கடுமையான சந்தேகங்கள் எழும்புகின்றன. எனது சகோதரரும் , மக்களவை தலைவருமான ராகுல் காந்தி ஹரியானாவில் நடந்த வாக்கு திருட்டு குறித்து வெளியிட்ட வலுவான சான்றுகள் அதிர்ச்சியளிக்கின்றன.

வெறுப்பு பிரச்சாரம் மற்றும் பொய்யான வாக்குறுதிகளை நம்பி பாஜக 2014 இல் ஆட்சிக்கு வந்தது. அப்போதிலிருந்து, மக்கள் பாஜகவின் பிளவுபடுத்தும் அரசியலை நம்புவதை நிறுத்திவிட்டனர். இப்போது, ​​தேர்தல் முறைகேடுகளுக்கு அப்பால், அவர்கள் வாக்காளர் பட்டியலைத் திருடி, மக்களின் ஆணையைத் திருடுகிறார்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதற்கும்மேல், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ( SIR)இன்னும் ஆபத்தானது. வாக்காளர் பட்டியல் திருத்தம் என்கிற போர்வையில் குடிமக்களின் ஒழுங்கமைக்கப்பட்ட வாக்குரிமை பறிக்கப்படுகிறது என்பதற்கு பீகாரில் நிகழ்ந்தவையே உதாரணம். இன்று வெளியிடப்பட்ட ஹரியானா வாக்குத்திருட்டு ஃபைல்ஸ் தகவல்களும் அதையே உறுதி செய்கின்றன.

இந்த நாட்டு மக்கள் வரியாகச் செலுத்தி கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தில் செயல்படும் ஒரு சுயாதீன அமைப்பாக இருக்க வேண்டிய இந்திய தேர்தல் ஆணையம், இதுவரை இவ்வளவு பெரிய அளவிலான ஆதாரங்கள் வெளியிடப்பட்ட போதிலும் நாட்டு மக்களுக்கு எந்த விளக்கத்தையும் வழங்கவில்லை என்பது வேதனையளிக்கிறது. தேர்தல் ஆணையம் மக்களுக்கு பதிலளிக்குமா, இந்தியாவில் ஜனநாயகம் இன்னும் முழுமையாக புதைக்கப்படவில்லை என்ற நம்பிக்கையை மீண்டும் உயிர்ப்பிக்குமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

 

MUST READ