தனுஷ் பட நடிகர் காலமானார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ‘துள்ளுவதோ இளமை’ எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா இயக்கியிருந்தார். செல்வராகவன் திரைக்கதை எழுதியிருந்தார். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ஷெரின், ரமேஷ் கண்ணா, அபிநய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
அதில் நடிகர் அபிநய், ஜங்ஷன் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் சக்சஸ், சிங்காரச் சென்னை, பொன்மேகலை போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார். இது தவிர இவர் மலையாளத்தில் சில படங்களிலும், ஒரு சில விளம்பர தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்காக பண உதவி கேட்டும் கோரிக்கை விடுத்தார். அதைத்தொடர்ந்து தனுஷ், கேபிஒய் பாலா போன்றோர் அவருக்கு பண உதவி செய்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார் அபிநய்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று (நவம்பர் 10) அதிகாலை 4 மணி அளவில் காலமானார். நல்ல நடிகராக வந்திருக்க வேண்டிய அபிநய், தனது 44 வயதிலேயே மறைந்த செய்தி பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவருடைய மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


